Saturday 29 December 2018

ஜாதி இரண்டொழிய வேறில்லை....!

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.......
                            இவ் வார்த்தைகள் நம் மூதாதை ஔவை பாட்டி நமக்கு கூறிய சிறப்பான நெறி ஆகும்...
    ஒளவையார் சாதி என்று குறிப்பிடும் பொழுது மனிதர்கள் 
பிறப்பால் உருவாக்கி கொள்ளும் சாதியையோ 
அல்லது பாலின (ஆண்,பெண்) அடிப்படையில் உருவாகும் சாதியையோ 
குறிப்பிடவில்லை!
மாறாக மண்ணில் யாரெலாம் நீதி வழுவாமல் வாழ்கிறார்களோ அவர்கள் உயர்ந்த சாதி 
நீதி நெறி தவறி வாழ்பவர்கள் தாழ்ந்த சாதி என மே[மெ]ன்மையான கருத்தை விதைக்கிறார்.....ஆம் என் அன்பிற்கினிய மனித உறவுகளே!
      இம்மண்ணில் மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் உலகின் விருந்தினர்களே இங்கே நிலைப்பவர் எவரும் இல்லை...விருந்திற்கு வந்த இடத்தில் நம் விலை மதிப்பற்ற மன[ஆன்ம]உணர்வை சாதியும்,மதமும் சிதைத்து விட்டால் விருந்தேப்படி சுவைக்கும்..
நம் வாழ்வு எப்படி சிறக்கும்..

     அக்காலத்தில் சாதிகள் என்பது  நம் முன்னோரின் தொழில், வாழ்க்கை முறை, புகழ் அல்லது பட்டம் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை தெரியப்படுத்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்ந்தது. இன்று அவையே வேரூன்றி ஆலமரம் போல் அசைக்க முடியாமல் மனித சமூகத்தில் வேற்றுமையைக் காட்டும் சாதிகளாக நடமாடி வருகின்றன. 

இதில் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ பிரித்துப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. எனவே சாதிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சாதிகள் ஏற்றபட்ட காலத்தில் அவை பிறப்பை மையமாகக் கொண்டு அமையவில்லை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டே அமைந்தது. மற்றும் அவை ஒருவனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ நிரந்தரமாகவும் அமைந்தவை அல்ல, அதாவது அவன் செய்யும் தொழில் மாறுபட்டால் அவன் சாதியும் மாறும் 
ஆனால் இன்று சாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. 
ஒருவர் என்ன தொழில் செய்தாலும் சாதி மாறாத் தன்மையுடன் திகழ்கின்றது. இது இடையில் ஏற்பட்ட மாறுதல்களே ஆகும். இவற்றை நாம் மாற்ற வேண்டும். 
மனிதன் தோன்றியது ஓருயிரில் இருந்துதான் என்ற கருத்தை அனைவரும் ஒத்துக்கொள்கிறோம். அப்படியிருக்க அனைவரும் ஒருவருக்கொருவர் உறவுமுறை கொண்டவராக இருக்கவே வாய்ப்புண்டு இதில் எங்கிருந்து வந்தது இந்த ஏற்றத் தாழ்வு?
 உயர்ந்தவன் தாழ்ந்தவன் ?
ஒவ்வொரு சாதியும் எப்படி உருவாகியது, அதன் அர்த்தம் என்ன, அதன் வரலாறு என்ன என்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தன் சாதிதான் பெரிது என்று பேசுகிறவர்கள் கூட‌ அவர்களின் சாதியின் வரலாறு என்ன என்று அறிந்திருக்க மாட்டார்கள். 
அப்படி அறிந்திருந்தால் ஏற்ற தாழ்வு பேசமாட்டார்கள் தானே...
இங்கு நான் படித்து கண்ட,கடந்த சில விடயங்களை உங்களோடு பகிர விரும்புகிறேன்.
மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான்.  ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது. அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர்.  இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள்  தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன.  இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே சாதிகள்.

ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும்.  அண்ணல் அம்பேத்கர் ஒருவித வரலாற்றுச் சட்டகத்தை மனதில் கொண்டு  இத்தகைய போக்கை பிராம்மணீயம் என அழைக்கிறார். ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை.மனிதர்கள் அனைவரும் ஒன்றே, சாதி வேறுபாடுகள் காலாவதியானவை என்கிற எண்ணமே மானுடநேய எண்ணமாகும். ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.

இக்கட்டுரையை எழுதும் நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவனாக எனுடைய பிறப்பு பதியப்பட்டுள்ளது எனில் என்னை மிகவும் பிற்படுதியவர் யார்?
ஆதி காலம் தொட்டு இன்றுவரை பல பரிணாம வளர்ச்சிகளை கடந்து மனிதன் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஜாதி எனும் பெரும் சுமையை தூக்கி சுமக்கலாகாது.எனினும் ஜாதி என்னுடைய அடையாளம் என கூறும் என் அன்பிற்கினிய உறவுகளுக்கு ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...

இன்று உலகமே பார்த்து பரிதாபப்படும் வறுமையின் உச்சியில் தினம் தினம் பல்லாயிர கணக்கான மனித உயிர்கள் மண்ணில் செத்து விழும் #சோமாலியா நமக்கான புகட்டே...
இயற்கை வளங்களை மட்டுமல்ல மனித மனங்களையும் பாதுகாக்க தவறியதே இன்றைய அவல நிலைக்கு காரணம்..ஆம் உறவுகளே சோமாலிய மக்கள் தங்களுக்குள் பல்வேறு ஜாதிய கட்டமைப்புகளாலேயே அவர்களின் ஒற்றுமை சிதைந்து போனதாகவும் ,அவர்களிடம் ஒற்றுமை இல்லாமல் போனதே அவர்களால் இந்த சர்வதேச வல்லாதிக்க சக்திகளை எதிர்கொள்ள முடியாமல் அழிவின் விளிம்பிற்கு வந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்..

       "உலக வரலாற்றில் ஜாதியால் சாதித்தவர்கள் யாருமில்லை 
                சாதித்தவர்களில் யாரும் ஜாதி பார்த்ததில்லை"  



வேதமறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்
சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.
நாலு குலங்கள் அமைத்தான் அதை
நாசமுறப் புரிந்தனர் மூடர்
சீலம் அறிவு தருமம் இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

      ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை,
 மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை,
 ஏவல்கள் செய்பவர் மக்கள்
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்
மானிடர் வேற்றுமை இல்லை
சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
                தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலவர் கீழவரென்றே வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.
 கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்
                கொண்டு வைய முழுதும் பயனுறப்
                பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

...............ஆயிரம் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.     பாரதி ,,,,

மனதில் பட்டதை பதிந்தேன் ..மாற்று கருத்திருந்தால் மறவாமல் கருதிடுக..

என்றும் அன்புடன் 
    தமிழன் வீரமணி .


Tuesday 11 December 2018

உலகெங்கும் பரந்து வாழும் தமிழனும் ,மறந்து போன தமிழும்......

தோற்றம்;
                     தமிழன் _ வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து{குமரிக்கண்டம்} கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பினர். 
19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும் இரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய்வு செய்தது.
இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலைகள்  இருப்பது தெரிய வந்தது. அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குமரிகண்டத்திற்கு வரைபடம் வெளியிட்டுள்ளனர்.

சரி அவ்வாறு பார்த்தால் குமரிகண்டத்தில் இருந்த தமிழன் எவ்வாறு உலகம் முழுக்க செல்ல முடியும்?
                 
                    தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை.ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன.
அனால் எந்த நுண்ணறிவை வைத்து தமிழன் இங்கெல்லாம் பயணம் செய்திருக்க முடியும்?
                            ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். இன்றைய தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான்.ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்திஇருக்கிறான் என்றால் கடல்கடந்து உலகம் முழுக்க தனக்கான வாழ்விடத்தை தமிழர்கள் அமைத்திருகிறார்கள் என்பதை அறியமுடிகிறதல்லவா.....
விவரமாக காண்போம்;
                     உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்தமிழ் மொழியிலிருந்தே தெலுங்குகன்னடம்மலையாளம் ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர். உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவரும், தமிழ்நாட்டில்தமிழீழத்தில் தமிழரோடு வாழ்ந்து தமிழில் பேசி, தமிழ்ப் பண்பாட்டை கடைபிடிப்பவரும் தமிழர் ஆவர். பழங்காலத்தில் சீனாஎகிப்துகம்போடியாஇந்தோனேசியாதாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் விவசாயம் புரிய அழைத்துச் சென்றனர். மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இது போன்ற காரணங்களால் தமிழர் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மக்கள்தொகையும் தமிழர்கள் அந்நாடுகளில் செய்த அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளும் தமிழை மற்ற சில நாடுகளிலும் ஆட்சி மொழியாக்க காரணங்களாய் அமைந்தன.
இனி தமிழர் வாழ்வை காண்போம்...
      
           கயானா :
தென் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் அதிகமானோர் வாழும் நாடானா கயானா,இயற்கை எழில் மிகுந்த , பார்க்க வேண்டிய பல சுற்றுலா இடங்களையும் நிறையவே கொண்டுள்ள நாடு கயானா. தென் அமெரிக்காவின் 3 
South Americawith Guyanaஆவது சிறிய நாடான கயானாவின் தலைநகர் ஜியோர்ஜ் டவுன். பிரிட்டிஷ்  காலனித்துவ நாடாக இருந்த இதில் பல வம்சாவளியைச் சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இந்தியர்கள், ஆப்ரிக்கர்கள் இந்தோ-அமெரிக்க பிரிவினர் என மூன்று பெரிய பிரிவினர் இருக்கிறார்கள் .தென் அமெரிக்காவிலேயே ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக கொண்ட ஒரே நாடு என்ற பெயருடன் குயானா விளங்குகிறது.
ஏறக்குறைய 45 விழுக்காட்டு மக்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் 1833 முதலே இங்கு குடியேறத் தொடங்கினர் என்ற வராலாற்று உண்மையையும் 
அந்நாட்டு பிரதமர் மாண்பு மிகு மோசஸ் வீராசாமி நாகமுத்து ஒரு புத்தகம் மூலம் குறிபிட்டுள்ளார்....
ஆனால் ஒரு வருத்தம் அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால் இங்கு  வாழும் தமிழர்களில் யாருக்குமே தமிழ் அறவே தெரியாது என்பதாகும்.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com 

ஜெர்மனி:
தமிழ் பின்புலம் உடைய ஜெர்மனி வாழ் மக்களை ஜெர்மன் தமிழர்கள் (German Tamils) எனலாம். ஜெர்மனிக்கும் தமிழ் நாட்டுக்கும் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு. இத்தொடர்பை ஜெர்மன் தமிழியல்மூலமாக மேலும் விளங்கிகொள்லாம்.
ஏறக்குறைய 75,000 தமிழர்கள் ஜெர்மனியில் வசிக்கின்றார்கள். பெரும்பாலனவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினைகாரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் ஜெர்மனியில் பரந்து வாழ்கின்றார்கள்.
ஜெர்மனியில் முதன்முதலாக 1990 இல் தமிழலாயம் தொடங்கப் பெற்றது. தற்சமயம் ஜெர்மனியில் 133 தமிலாயங்கள் இயங்குகின்றன.
மன்கைம் தமிழாலயம் (ஜூலை 5, 1997 தொடங்கப் பெற்றது)
ஸ்ருட்கார்ட் தமிழாலயம் (1990 இல் தொடங்கப் பெற்றது)
தமிழ்ப்பெண்கள் அமைப்பு - ஜெர்மனி (Tamilische Frauen Organisation - Deutschland),மாணவர் அமைப்பு,தமிழர் கலாச்சார ஒன்றியம் ,தமிழர் விளையாட்டு ஒன்றியம் போன்ற அமைப்புகளும் நிறுவப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது..
ஹம் காமாட்சி அம்மன் கோயில்,சிறீ நாகபூசணி அம்மன் ஆலயம் இன்னும் சில ஆலயங்களும் தமிழ்மரபு கொண்டுள்ளது.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com 

கென்யா:
                    இங்கு வாழும் தமிழர்கள் கென்யத் தமிழர்கள் ஆவார்கள். கென்யாவில் ஏறத்தாழ 500 தமிழ்க் குடும்பங்கள் இருக்கின்றன.கென்யாவிலுள்ள தமிழர்களில் தற்போது யாருக்கும் அவ்வளவாக தமிழ் பேசத் தெரியாது. குறிப்பாக 1850 களில் காலத்துவ பிரித்தானிய அரசால் பணிக்கமர்த்திய தமிழர்கள்.
கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம்,மொம்பஸா தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும் இங்கு உள்ளது..
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com 


தாய்லாந்து:
               1830ஆம் ஆண்டில் தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது கிட்டதட்ட 58,000 அதிகமான தமிழர் அங்கு வாழ்கிறார்கள். சிலர் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டு மொழியை அடியோடு இழந்து விட்டார்கள் மற்றும் சிலர் தமக்கடுத்த சங்கதியினர்க்கு தமிழ் கல்வியை தமது முயற்சியில் புகட்டிவருகின்றனர்.மேலும் மொழியின் பற்று குறைந்து போக அந்நாட்டின் கலாச்சாரமும் காரணமாக அமைகின்றது.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

இந்தோனேசியா:
                              இந்தோனேசியாவில் தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியேறினார்கள். 1946ஆம் ஆண்டில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள். அதற்குப்பிறகு ஜாகர்தா நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்.இன்று 1000கும் அதிகமான மக்கள் வாழ்வதாக கூறபட்டாலும்,தமிழ்மொழியின் ஆளுமை குறைவுதான்,பணி நிமிர்த்தமாக இருபவர்களே அதிகம் என்பதால் தாய் மொழி அவர்களுக்கு முகியமனதாக தெரியவில்லை.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

தென் ஆபிரிக்கா:
                           தென் ஆப்பிரிக்காவில் 2,50,000தமிழர்கள் வாழ்கிறார்கள்.தென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் புலம்பெயர்வு 1860-1911- களில் தொடங்கியது. குவாலு நத்தால் (Kwazulu-Natal) என்ற பகுதியே தமிழர்களின் குழுமங்கள் உருவாக்கப்பட்ட இடமாக இருந்தது. இன்று டர்பன் (Durban) போன்ற இடங்கள் தமிழர்களின் வாழ்வுத் தளமாக உருவாகியுள்ளது. இன்று தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வாழ்வியல் மொழியாகியுள்ளவை ஆப்பிரிக்கமொழியும் ஆங்கிலமொழியுமாகும்.இன்றைய இளைய தலைமுறை தமிழை அவளவாக விரும்பாமல் இருக்க ...அவர்களின் பெரியோர்கள் தமிழை முனைப்போடு வளர்க்க விரும்புகிறார்கள் ,தாய்மொழியை இழந்துவிட்டாலும் மத சம்பந்தமான சடங்குகளையும் கலாச்சார நடவடிக்கைகளையும் போற்றிப் பாதுகாத்தால் மட்டுமே தங்களுடைய இன அடையாளத்தைப் பாதுகாக்க முடியும் என அவர்கள் கருதுகிறார்கள்.தென்ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளையர்கள் அங்குள்ள தமிழர்களைக் கூலிகள் என்றும் அவர்கள் பேசும் மொழியை கூலி மொழி என்றும் இழிவு படுத்தியதால் தமிழர்கள் தங்கள் மொழியிலேயே பேசுவதற்கு வெட்கப்பட்டார்கள். இந்த நிலைமை தொடருமானால் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த இரு தலைமுறைகளுக்குள் தமிழ் முற்றிலுமாக மறைந்து போய் ஆங்கிலமே தமிழர்களின் மொழியாக மாறும்.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

கரிபியன் தீவுகள்:
                           
இங்குள்ள தமிழர்களும் மொரிசியஸ், பிஜி தமிழர்களைப் போலவே புலம் பெயர்ந்தவர்கள். அவர்கள் முற்றிலுமாக தங்கள் தாய் மொழியை இழந்து விட்டார்கள்.  டிரிநாட் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுமையாகத் தங்கள் தாய் மொழியைத் தொலைத்து விட்டார்கள். இங்குள்ள தமிழர்கள் பல மத விழாக்களை அவற்றின் அர்த்தம் புரியாமலேயே கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் பிரஞ்சு மொழியைப் பேசுகிறார்கள். சிலர் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள். புதுச்சேரியிலிருந்து குடியேறிய தமிழர்கள் தற்போது பிரஞ்சுக்காரர்களாகவே ஆகிவிட்டார்கள். அவர்கள் தமிழ் பேசுவதில்லை. தமிழில் கூட சிந்திப்பதில்லை. பல தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் தமிழ் தெரியாது. 4 தலைமுறை காலத்திற்குள் இவர்கள் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். கல்வித் திட்டத்திற்காக இந்துத் தமிழர்கள் பலரும் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டார்கள். கத்தோலிக்க மதப் படிப்புடன் பிரஞ்சு மொழியை அவர்கள் கற்கிறார்கள். இங்குள்ள தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் வீடுகளில் தமிழுக்குப் பதில் பிரஞ்சு மொழி பேசப்படுகிறது. தமிழர்களின் பெயர்கள் திரிபடைந்து உச்சரிப்பு கூட மாறிவிட்டது. சூரினாம், சமைக்கா, பிரிட்டிஷ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுவதுமாக தங்கள் தாய்மொழியை இழந்து விட்டார்கள். அவர்கள் தமிழ் மொழியை மீண்டும் கற்பது என்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

ரீயுனியன்:
ரீயூனியன் தீவில் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம், தொழில், அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் செல்வாக்கு உடையவர்களாக அவர்கள் திகழ்கிறார்கள். மொரிசியஸ் தமிழர்களைப் போலவே ரீயூனியன் தமிழர்களும் அங்கு புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். கிரியோலி மொழியே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. தமிழர்களில் 95 சதவீதத்தினர் தமிழ் பேசத் தெரியாதவர்கள். 5-6 தலைமுறைக்கு அவர்கள் தங்கள் மொழியை இழந்துவிட்டார்கள். மொரிசியஸ் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை ரீயூனியன் தமிழர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்..இவர்களில் பெரும்பான்மை 18 ஆம்நூற்றாண்டில் பிரான்சிய காலனித்துவ ஆட்சியாளர்களால் வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.  இவர்கள் தங்கள் மொழியை இழந்தாலும் பரம்பரையாக தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொண்டுள்ளனர். மேலும், பாண்டிச்சேரி இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டவுடன், பிரான்சு அரசு பாண்டிச்சேரிவாழ் மக்களுக்கு பிரான்சு குடியுரிமை வழங்க முன்வந்தது. இதன் மூலம் 150 பாண்டிச்சேரித் தமிழ்க் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.
தமிழ் மொழி சில பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. தமிழ்ச் சங்கம் ஒன்றும் இயங்குகிறது. தங்களுக்கு இந்தியக் குடியுரிமையும் இந்தியப் பண்பாட்டைப் பேண பல்கலைக்கழகமும் வேண்டும் எனக் கோரியுள்ளனர். பாண்டிச்சேரி, சென்னை நகரங்களை புனித ஆன்றீசு, புனித டெனிசு ஆகிய நகரங்களுடன் தொடர்பில் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.அனால் இன்றைய ஆளும் வர்க்கம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா என்பது கேள்விக்குறியான விடயமே..
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com
சீசெல்சு:
                சிசெல்சு தென்கிழக்கு ஆபிரிக்க முனையில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் மொத்த மக்கள் தொகை 81000 ஆகும். அது ஒரு மிகச் சிறு விழுக்காடு, ஏறக்குறைய 4000 மக்கள் தமிழர் ஆவர். இங்கு தமிழ்ப் பண்பாட்டு விருத்தி மையம் ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பினூடாக 150 மாணவர்கள் தமிழ்க் கல்வி பெற்று வருகின்றனர்.1770 களில் ஒரு சிறு குழு தமிழர்கள் இத்தீவுகளுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.புதுச்சேரியில் இருந்து வணிகர்கள் இங்கு வந்து வணிகம் செய்து வந்தனர். வணிகம் செய்ய வந்தவர்கள் இங்கேயே தங்கினர் என்றும் கூறபடுகிறது.இங்கு தமிழ் முரசு என்ற நாளிதழும்  சீசெல்சுத் தமிழ் மன்றம் வெளியாகிறது.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

மொரிசியஸ்:
                     மொரிசியஸ் தீவில் போஜ்பூரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அடிமைகளாக இந்த நாட்டுக்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். இதன் விளைவாக அவர்கள் தங்கள் மொழியின் மீது கொண்டிருந்த பற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள். பிரஞ்சு, கிரியோலி, மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும், தாய் மொழியான தமிழ் மூலம் அது கிடைக்காது என்பதை உணர்ந்த தமிழர்கள் மேற்கண்ட மொழிகளுக்குத் தாவினார்கள். மொரிசியஸ் தீவில் தமிழர்கள் குவியலாக ஓர் இடத்தில் வாழவில்லை. தீவு முழுவதும் பரவிக் கிடந்தார்கள். அவர்களுடைய மொழி இழப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும். கிராமப்புற பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் ஓரளவிற்குத் தங்களுடைய மொழி உணர்வைக் காப்பாற்றிக் கொண்டார்கள். நகர்ப்புறங்களில் குடியேறிய தமிழர்கள் அங்கு பெரும்பான்மையோர் பேசிய மொழியிலேயே பேசி வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். மேலும் மொரிசியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் நகரைக் கட்டுவதில் புதுச்சேரி தமிழர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். கிறித்துவ தமிழர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் குடியேறினார்கள். மொலாட்டோ இனத்தவரும் கிரியோலி இனத்தவரும் கிறித்துவ தமிழர்களுடன் இரண்டறக் கலந்ததாலும் அவர்கள் தங்கள் மொழியை இழந்தனர். மேலும் ஆரம்பப் பள்ளிகளில் கீழ்த்திசை மொழி அல்லது கிறித்துவ மதப் படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கிறித்துவத் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் மதப் படிப்பை படிக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே, தமிழ் அந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படவில்லை. மேலும் தமிழர் பாட நூல்களில் பெரும்பாலும் இந்துக் கடவுள்கள், துறவிகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியவை பற்றிய படங்கள் இருந்தன. மதசார்பற்ற தன்மையில் அந்த பாட நூல்கள் அமையவில்லை. கிறித்துவ குழந்தைகள் இதைக் கற்க விரும்பவில்லை. இதன் விளைவாக கிறித்துவ தமிழர்களில் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்துத் தமிழர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்களாகக் கருதத் தொடங்கினார்கள்.இதைப் போலவே இந்துத் தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை இழந்தார்கள். வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. மொரீசியஸ் தீவில் தமிழர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதம் ஆகும். ஆனால் வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 0.6 சதவீதம் மட்டுமே. 53832 பேர் தமிழ் தங்கள் மூதாதையர்களின் மொழி என்பதை அறிந்தவர்கள். ஆனால் இவர்களில் 6,943 பேர் மட்டுமே தமிழை வீடுகளில் பேசுபவர்கள். இது போன்ற தமிழர்களின் எண்ணிக்கை குறித்து பல விவரங்களை நூல் ஆசிரியர் அளித்துள்ளார். தமிழ் மொழி - இலக்கியம் - பண்பாடு ஆகியவற்றின் சிறப்பு குறித்து மொரிசியஸ் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தங்களுடைய தமிழ்ப் பரம்பரை குறித்து அவர்களுக்கு பெருமிதம் உண்டு. மொரிசியசில் அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி உள்ளார்கள். மொரிசியஸ் நாணயங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் தமிழ் நிகழ்ச்சிகள் உண்டு. சுமார் 200 தமிழ் பள்ளிக்கூடங்களும் 200 தமிழ் ஆசிரியர்களும் மொரிசியசில் உள்ளனர். மொரிசியஸ் தமிழர்கள் குறித்த வரலாறு அவர்களின் நாட்டுப்புற இலக்கியம் இவைகளைப் பற்றிய நூல்களும் உண்டு. மொரிசியஸ் தமிழர்களுக்கிடையே எழுத்தாளர்களும் கவிஞர்களும் உண்டு. தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். தமிழர் பண்பாட்டோடு மொழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்களே தங்கள் கருத்துக்களை முழுமையாகத் தமிழில் வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். மிகச் சிலரே பிழை இல்லாமல் தமிழ் எழுதுகின்றனர். இதன் காரணமாக மொழிச் சிதைவு ஏற்பட்டுள்ளது. மொரிசியஸ் தமிழர்களிடையே தாய்மொழி இழப்பு குறித்து அவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தமிழர்கள் திறமைவாய்ந்த உழைப்பாளிகளாக அறியப்பட்டனர். எனவே, அவர்களைக் கவுரவிக்கும் விதமாக மொரிசியசு அரசு, மொரிசியசு ரூபாய்பணத்தில் தமிழ் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிடுகிறது.

தைப்பூசம், தீபாவளிப் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பல இன மக்களின் மொழிக் கலப்பால் மொரிசியசு கிரியோல் என்னும் மொழி உருவானது. இம்மொழியின் பல சொற்கள் தமிழில் இருந்து பெறப்பட்டவை என்பதும் குறிபிடத்தக்கது.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

பிஜி:
                  பிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள்.
 1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது. பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை. தமிழைப் பேசுவதும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவமானத்திற்கு உரிய ஒன்றாக தமிழர்கள் கருதினார்கள். தமிழர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. 
அதே வேளையில் இந்தி மொழி பேசுபவர்கள் இந்தியைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள். பிஜித் தீவில் தமிழ் மாநாடு ஒன்று நடத்தப்படுவதை இந்திக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள். பிஜித் தீவில் குடியேறிய இந்தியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலத்தையும் கால்வாசிப் பேர் இந்தியையும் 14 சதவீதம பேர் தமிழையும் ஆதரித்தார்கள். பிஜி மக்களிடையே இந்தியைப் பரப்புவதில் இந்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவழித்தது. ஆனால் தமிழக அரசு தமிழ்ப் படிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் தட்டச்சு இயந்திரம் மற்றும் தமிழ் கற்பதற்கான உதவிகளை செய்யும்படி தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்கவில்லை. 
பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடையே கலப்புத் திருமணங்கள் தாராளமாக நடந்தன. இதன் விளைவாகவும் இந்தி பொது மொழியானது. தமிழ் பண்பாடு மேலும் தகர்ந்தது.
பிஜித் தமிழர்களிடையே தாய் மொழி உணர்வு என்பது முழுமையாக அற்றுப் போய்விட்டது. தமிழுக்குப் பதில் இந்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, தமிழக அரசிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காமை, பிஜி அரசின் கொள்கை, கலப்புத் திருமணங்கள், இந்தி பேசுபவர்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றின் காரணமாக தமிழ் தன் இடத்தை இழந்தது. இந்தியைத் தமது தாய்மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டி நேரிட்டது. பிஜித் தமிழர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் தாய்மொழியைத் தியாகம் செய்தார்கள்.தொடக்கக் காலத்தில் ரோமானிய எழுத்துக்களில் தமிழ் கற்றுத் தரப்பட்டது என தகவல் உள்ளது. காலனித்துவ அரசு இந்திக்கே அதரவு அளித்ததால் தென்னிந்திய மொழிகளில் கல்வி கற்றுத் தரப்படவில்லை. இருப்பினும், தன்னார்வலர்களின் முயற்சியால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் கற்றுத் தரப்பட்டன. அண்மைய ஆதாரத்தின்படி, 2002 ஆம் ஆண்டில் தென்னிந்திய சன்மார்க்க சங்கப் பள்ளிகளில் 1728 மாணவர்கள் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்தனர்.ஆனாலும் இளம்தலைமுறையினர் தமிழை கற்றுகொள விரும்புகின்றோம் என்ற ஆர்வத்தையும் தெரிவித்தார்காலம்...
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com
ஆஸ்த்லிரேயா:

இங்கு தமிழர்கள்  இவர்களில் 90%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்
இன்று கிட்டத்தட்ட 5000 கும் அதிகமானோர் தமிழ் பேச எழுத தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதும்,இதில் பெரும்பாலும் ஈழ தேசத்தை சார்ந்தவர்களாக இருப்பதும் குறிபிடதக்கது.
[குறிப்பு ;மேலும் தற்காலத்தில் நடந்துவரும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் தமிழகத்திற்கும் ஆஸ்த்ரேலியாவிற்கும் தொடர்பு இருபதாக கூறியுள்ளது.]
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

டென்மார்க்:
                டென்மார்க் தமிழர் இவர்களில் 99%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்.மீதம் உள்ளவர்கள் தொழில் நிமிர்த்தமாக இருப்பவர்களாகவும்  இங்கு ஏறத்தாழ 9,000 தமிழர்கள்  வசிக்கின்றனர்.இதில் 4147 பேர் மட்டுமே தமிழ்மொழி சரளமாகவும் எளிமையாகவும் பேசுவதாக ஒரு தனியார் நிறுவனத்தின் வாக்கெடுப்பு குறிபிடுகிறது.ஈழ தமிழர்கள் சிலர் இங்கு நகர சபை உறுப்பினர் போன்ற அரசு பதவிகளில் இருப்பது குறிபிடத்தக்கது.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

நெதர்லாந்து:
                 நெதர்லாந்து தமிழர்கள் இவர்களில் 90%தினர் ஈழ தீவில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் .இங்கு 20000 கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள்.மேலும் தமிழர்களுக்கான மாணவர் அமைப்புகள் மற்றும் பொது சேவை அமைப்புகள் தமிழர்களால் நடத்தபடுவது குறிபிடத்தக்கது,இன்றைய தலைமுறை இளைஞர்கள் டச்சு மொழியை பிரதான மொழியாக அறியப்படுகிறார்கள் எனவே தமிழின் பயன்பாடு குறைந்துள்ளது.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

நார்வே:
              நார்வே தமிழர்கள் 90%தினர் ஈழ தமிழர்களாகவே இருக்கிறார்கள்,12000 கும் அதிகமான தமிழர்கள் இங்கு வாழ்கிறார்கள்.இவர்களில் 7000 பேர் தமிழ்மொழியில் பேச தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.தமிழர்கள் அரசியல் மற்றும் சமூக நிலைகளில் உயர்ந்து வருகிறார்கள்.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com


சிங்கப்பூர்:
                    இங்கு சுமார் 90000 கும் அதிகமான தமிழ்மக்கள் வாழ்கிறார்கள் . சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இந்தியாவில் கூட தேசிய அளவில் தமிழுக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் பல மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் தாய் மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் போதும் என அரசு கருதுகிறது. தமிழுக்கு முதல் மொழித் தகுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழர்களின் ஆர்வமின்மை காரணமாக அது இப்போது இரண்டாவது மொழி ஆகிவிட்டது. தேசிய அளவில் தமிழ் படிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறார்கள். சிங்கப்பூரிலுள்ள இந்தியர்களில் 65 சதவீதத்துக்கு மேலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள். தமிழ் வளர்ச்சிக்கு இது நிச்சயமாக உதவும். ஆனால் தமிழர்கள் சீன மொழி, மலாய் மொழிகள் தமிழை விட தங்களுக்குப் பயனளிக்கும் மொழிகள் எனக் கருதுகிறார்கள். இதன் விளைவாக சிங்கப்பூர் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே தமிழ் பேசுகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 4.8 சதவீதம் தமிழர்கள் இருந்தும் பயனில்லை. சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். சீன மொழி, மலாய் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. ஆனால் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்துக் கோயில்களில் கூட குருக்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். தமிழ்க் குழந்தைகள் தங்களின் பெற்றோருடன் மற்றும் பெரியவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்புகிறார்கள். இந்த நிலைமை நீடிக்குமானால் சிங்கப்பூர் தமிழர்கள் சில தலைமுறைகளிலேயே தமிழை இழந்து விடும் பயம் உண்டு. தங்கள் தாய்மொழிக்கு எதிரான தமிழர்களின் இந்தப் போக்கு வளருமேயானால் இன்னும் ஓரிரண்டு தலைமுறைகளில் சிங்கப்பூரிலிருந்து தமிழ் அடியோடு மறைந்து போகும்.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

கனடா:
            இங்கு வாழும் மக்கள் கனேடியத் தமிழர் ஆவர்.இங்கு 218000 திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள் இவர்களில் 60% ஈழ தேசத்தை சார்ந்தவர்களே..
இங்கு கிட்டதட்ட 170000 பேர் வீடுகளில் தமிழ்மொழியினை பேசுவதாகவும் 50000 திற்கும் அதிகமானோர் பொது இடங்களில் தமிழ்மொழியினை பேசுவதாகவும் குறிப்பெடுக்கபட்டுள்ளது.மருத்துவமனை போன்ற பொது இடங்களில் தமிழ்மொழியில் பெயர் பலகைகள் இடம்பெற்றுள்ளது குறிபிடத்தக்கது.இங்கு அரசின் மூலமும் தன்னார்வ அமைப்புகளின் மூலமும் தமிழ்மொழி  பள்ளிகளும் ,பயிற்சி நிகழ்வுகளும் நடைபெறுகிறது.ஆனாலும் இன்றைய தலைமுறை பிள்ளைகள் தமிழ்மொழியின் மீது அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நாளேடுகள்,7 தமிழ் வானொலிகள்,2 தமிழ் தொலைகாட்சிகள் இயங்கிவருவது குறிபிடத்தக்கது.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

மலேசியா:
             இங்கு வாழும் மலேசியா தமிழர்கள் 1,60,000 திற்கும் அதிகமானோர்.இங்கு தமிழின் வளர்ச்சியும் தமிழரின் வளர்ச்சியும் மிதமான அளவிலேயே இருக்கிறது.மலாய் மொழியும் சீன மொழியும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் தமிழ்மொழியின் பயன்பாடு குறுகிய இடங்களை மட்டுமே பெற்றிருகிறது.பல தன்னார்வ அமைப்புகளும் மாணவ அமைப்புகளும் அவ்வப்போது தமிழ் பயிற்சியும் சில பள்ளிகளையும் நடத்துவது குறிபிடத்தக்கது.குடும்பங்களில் வாழும் பெரியவர்களின் முயற்சியின் மூலம் இன்றைய இளையதலைமுறை பிள்ளைகளுக்கு தமிழ் பயிருவிக்கப்பட்டு வருகிறது.பத்திற்கும் மேற்பட்ட நாளேடுகள்,வானொலி மற்றும் தொலைக்கட்சிகள் இங்கு தமிழ்மொழியினை தாங்கி வருகின்றது.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

சவூதி அரேபியா:
                       இங்கு கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள் கிட்டதட்ட 20000 திற்கும் அதிகமான தமிழ்மக்கள் உள்ளனர் இவர்களில் பாதிக்குமேல் ஈழ தேசத்தை பிறபிடமாக கொண்டவர்கள்.இங்கு தமிழ் மொழிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுவதில்லை.ஆனாலும் தமிழர்கள் தங்கள் மொழிகளிலேயே பேசுகிறார்கள்.அவ்வபோது தமிழர்கள் சிரமத்திற்கு ஆளாவது இன்றும் தொடர்கிற நிலையே.
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

ஜப்பான்:
                 இங்கு கணிசமான அளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.குறைந்தபட்சம் 30000 கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்வதாக அங்குள்ள தனியார் துறையின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.இங்கு உள்ளவர்கள் 45%பேர் தமிழகத்தில் இருந்து பணி நிமித்தமாக வந்தவர்கள் ஆவர்.மீதம் உள்ளவர்கள் ஈழ தேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.இங்கு வீடுகளில் தமிழ் மொழியே பேசபடுகிறது பொது வெளியில் ஓரிரு இடங்களில் தமிழ் பதாகைகளும் அந்நாட்டின் அரசு நிறுவி உள்ளது சிறப்பு.மேலும் தமிழ் சங்கங்கள் மூலம் தமிழர்களின் ஆதரவு குரல் அவபோது ஒளித்து கொண்டிருப்பது பெருமையே...
இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

அமெரிக்கா:
                     அமெரிக்க தமிழர்  எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவில்குடியேறியவர்களாவர். அதிகமானோர் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் கல்விக்காகவும் வேலைக்காகவும் அமெரிக்கா சென்று, அந்நாட்டில் குடியுரிமைச் சட்ட உரிமைகளின் அடிப்படையில் அந்நாட்டிலேயே குடியுரிமைப் பெற்றவர்களாவர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் அங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.இங்கு கணிசமாக 2,39,045 கும் அதிகமான தமிழ் மக்கள் இருபதாக அந்நாட்டின் தனியார் நிறுவன கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.அமெரிக்காவின் சில மாகாணங்களில் தமிழ் மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. மாகாண வாரியாக தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
  • கலிபோர்னியா - கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலி - உயர்நிலைப் படிப்பு
  • மிச்சிகன் - மிச்சிகன் பல்கலைக்கழகம் - உயர்நிலைப் படிப்பு
  • சிக்காகோ - சிக்காகோ பல்கலைக்கழகம் - அடிப்படை, இளநிலை, உயர்நிலைப் படிப்புகள்
  • நியூ யார்க் - கொலம்பியா பல்கலைக்கழகம் -உயர்நிலைப் படிப்பு
  • மேடிசன் - விஸ்கான்சின் பல்கலைக்கழகம் - உயர்நிலைப் படிப்பு
  • சிக்காகோ - அமெரிக்காவின் இந்தியவியல் நிறுவனம் - உயர்நிலைப் படிப்பு
  • பிலடெல்பியா - பென்னிசில்வேனியா - உயர்நிலைப் படிப்பு
  • மிச்சிகன் - மிச்சிகன் அரசுப் பல்கலைக்கழகம் - உயர்நிலைப் படிப்பு
இது போன்று அமெரிகாவில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது..
தமிழர் வீடுகளில் தமிழ் மொழியிலேயே அதிகம் பேசுகிறார்கள்,இருந்த போதும் அங்கு ஆட்சி மொழி ஆங்கிலம் என்பதால் தமிழின் தடுமாற்றங்களும் அவபோது நிகழ்வது வழக்கமே..பொது வெளியில் தமிழ் பதாகைகள்,வழிகாட்டி போன்ற விடயங்களும் இல்லாமல் இல்லை...உலக புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர்கள்,பலதுறைகளில் சாதனையாளர்களின் முகமும் தமிழாகவே இருக்கிறது..

இங்கு வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com

சீனா:
          சீனத்தமிழர்  என்போர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டு சீனாவில் வாழும் தமிழர்களாவர். இவர்களில் அதிகமானோர் தமிழ்நாட்டில் இருந்து சீனா சென்றவர்களாவர். இவர்கள் பணியின் நிமித்தம் சென்று அங்கேயே குடியேறியவர்களாவர். சீனாவில் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் இல்லையென்பதால் ஏனைய நாடுகளில் புகலிடம் பெற்றது போன்று சீனாவில் இலங்கைத் தமிழர் எவரும் புகலிடம் பெற்றவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சீனாவில் தமிழர்களுக்கும் தமிழின் மரபுகளுக்கும் பல சான்றுகளும் இன்றும் வானளந்து நிற்பது சிறப்பே..இங்கும் கணிசமான அளவில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இங்கிருந்து ஹாங்காங் எனும் நகரங்களிலும் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள்..
தமிழர்களுக்கான வானொலி 50 ஆண்டுகளை கடந்து ஒலித்து கொண்டிருகிறது.
பெரும்பாலான சீனா இளைஞர்கள் தமிழ் மொழியினை கற்றுகொள்ள முன்வருகிறார்கள் என்ற மகிழ்வோடு...

இவற்றோடு நின்றுவிடவில்லை எம் அன்பான தமிழ் உறவுகளே உலகின் 153 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். [மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களின் வாழ்வியல் இடை சொருகலாக பதியப்படும்]
உலகெங்கும்  வாழும் தமிழர்கள் பற்றி மேலதிக தகவல் தெரியும் நண்பர்கள் தொடர்புகொள்ள :veerama001@gmail.com
ஆம்  ஆயிரம்மாயிரம் ஆண்டுகள் பழமைகளை தொலைத்துவிட்டு 
மோகத்தால் மொழியை விட்டு 
துரோகத்தால் மண்ணை விட்டு 
இனம் அழிந்து மனங்களில் ரணங்களை சுமந்துகொண்டு உலகின் முற்றத்திலே நீதிக்காய் ஏங்கி நிற்கும் எம் இனம் ஒருநாள் சர்வதேச வல்லாதிக்க சுமைகளை சுமந்தபடி மண்ணில் வீறுகொண்டு எழுந்து நிற்கும்..அன்று உலகமே எம் இனத்தை அன்னாந்து பார்க்கும் ,அதற்கு நானும் நீங்களும் இன்னும் வேகமாக உழைக்க வேண்டும்.

"நிச்சயம் ஒருநாள் தமிழர்களின் தேசம் மலரும்                                                                           அன்று என் இனத்தின் அதிகாலை அற்புதமாய் புலரும்"

என்றும் அன்புடன்
தமிழன் வீரமணி 

Wednesday 5 September 2018

மறக்க முடியாத ஆசிரியர் தினம்

கமால் ஆசிரியர்....
   யார் இந்த கமால் ஆசிரியர் என்று கேட்கிறீர்களா?
திருப்பூரின் பெரியார் காலணியில்
82 வயது ஓய்வு தலைமை ஆசிரியர்,நாங்கள் வாடகைக்கு குடிஇருக்கும் வீட்டின் முதலாளி மற்றும் நான் சந்தித்த மனிதர்களில் சற்று வேறுபட்டவர்....

 ஆனால் காலத்தின் கட்டாயம் அவர் பூத உடலை விட்டு உயிர் பிரித்தது.முதுமையின் காரணமாக அவர் எங்களை விட்டு பிரிந்தார்.
ஆசிரியர் பணியை பெருமையாகவும் உயர்வாகவும் எண்ணியவர் இந்த ஆசிரியர் தினத்திலேயே மரணித்தது ஒரு பாக்கியமே..!
  இரண்டு ஆண்டுகள் அவரோடு பயணித்த அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறது...
    சிறந்த நகைச்சுவையாளர்,ஆசிரியர்,குடும்ப தலைவர்,அறிவுரையாளர் என பன்முக சிறப்புக்களை கொண்ட மனிதர்...


    இன்றைய சூழலில் வாடகை வீட்டு முதலாளிகளை நேசிப்பது சற்று முடியாத சூழல்தான்.ஆனால் சற்று முரணாக இந்த வீட்டின் முதலாளிகள் சற்று வித்தியாசம்....
    என் இயல்பு மற்றோர் பேசுவதை கேட்டுவைத்துக்கொள்ளும் ஆசை எமக்கு நிறைய உண்டு.மாற்றார்க்கு தான் கற்றதை தன் இறுதிகாலத்திலும் கூட கற்றுக்கொடுக்கும் குணம் இவருக்கு...
இவை இரண்டுமே எங்களை பினைப்படைய செய்தது.தினமும் அவரோடு சில நிமிட உரையாடலே இருக்கும்(எனக்கு நேரம் அவ்வளவு தான் இருக்கும்),அதிலும் கூட பல அறிய தகவல்களை முன் வைத்து பேசுவார்.
    என்னோடு மட்டுமல்ல இந்த பகுதியில் அனைவரிடமும் அப்படித்தான் பேசுவார்.அதனாலயே அவர் வருவதைப்பார்த்தால் சிதறி ஓடுபவர்களும் உண்டு.ஒரு ஆசிரியரை பாரத்தால் யாருக்குத்தான் பயம் வராது..
   நான்தான்பற்றி சக ஒருவரிடம் கேட்டேன் அவர் கூறியது"அவர் எல்லாவற்றையும் விட நான்தான் பெரியவன் என்பது போல பேசுவார்"என சொன்னார்.
ஆனால் அவர் அவ்வாறு போசுவதற்கு வேறு காரணங்கள் உண்டு என்பதைதான் நான் உணரந்து கொண்டேன்..
தன் இறுதி காலம் உணர்ந்து தான் கற்றறிந்த விடயங்களையும் தன் அனுபவங்களையும் நமக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான் இருக்கும்.மேலும் அவர் ஆசிரியராக நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்கால சுடராக  இருந்த பெருமையும் கூட அவரை பேச வைத்திருக்கலாம்...
     அவரின் மதச்சார்பற்ற உணர்வும் மனிதநேயமான தன்மையும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது.பல நூறு அறிவுரைகளை தனிமையில் வழங்கியுள்ளார்.அந்த எண்ண அலைகள் என் நினைவில் வரும் போதெல்லாம் அவருக்காக ஒரு துளி கண்ணீர் எம் கண்ணில் கசியும்..
     அவரை சந்தித்தது அவரால் நான் சிந்தித்தது இவையாவும் இறைவனின் ஆணை.....
    அவரின் பூத உடலில் இருந்து புறப்பட்ட ஆன்மா இறைவனின் கருணை....

                                         இப்படிக்கு உங்கள் மாணவன் 

                                           தமிழன் வீரமணி

Monday 14 May 2018

என் அம்மாவுக்காக......

தாய்மை என்பது....
               
 மண்ணில் குழந்தையாய்த் தவழ்ந்து, சிறுமியாய் ஓடி விளையாடி மங்கையாய் வாழ்க்கையை இரசிக்க ஆரம்பிக்கும் ஒரு பெண் தாய் என்னும் அந்த உயர்ந்த நிலையை  அடையும்போதுதான் முழுமையான ஒரு பெண்ணாக ஆகிறாள். தாய்மை என்பது அந்த இறைவனால் பெண்களுக்கே வழங்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும்.
 தாய் என்பவள் ஒன்பது மாதங்கள் நம்மைக் கருவறையில் சுமந்து, நாம் உதைக்கும் வலியையும் பொறுத்துக் கொண்டு அதைச் சுகமாகக் கருதும் ஒரே உயிராகும். குழந்தை பிறந்த பிறகு, தாய் தனது இரத்தத்தையே பாலாக்கி, பாலூட்டித் தாலாட்டுவாள். தொப்புள் கொடி அறுக்கப்பட்டாலும் தாய்க்குத் தனது குழந்தை மீது உள்ள அன்பும் அக்கறையும் குறையவே குறையாது. இரவு பகல் பாராது தாய் தனது குழந்தையைக் ‘கண்ணை இமை காப்பது போல’ வளர்ப்பாள்.

 இந்த புவியில் 8.4 பில்லியன் மனிதப் புன்னகையின் யுனிவர்சல் உரிமை, ஆதிப் பெண்ணின் கருவறைக்கே சொந்தம். அவளில் இருந்து இத்தனை கோடி இன்பமாய் பெருக்கெடுத்து, கடந்த நொடி பிறந்த குழந்தை வரை மனித குலத்தைப் படைத்து அளிக்கும் தாய்மை, பெண்மையின் தனிச்சிறப்பு. ஒரு பெண், தாய் ஆக தன் உடலால், மனதால் செய்யும் தியாகங்களுக்கு இணையாக எதுவுமே இல்லை இந்தப் பிரபஞ்சத்தில்.....

 இவ்வுலகில் பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு பரிணாமங்களை வாழ்க்கையில் சந்திக்கிறாள். அவற்றில் உன்னத அந்தஸ்தை தருவது ‘தாய்’ என்ற ஸ்தானமாகும். தாய்மையை போற்றக்கூடிய வகையில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ‘அன்னையர் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது.
     

என் தாயை பற்றி.....

தாய் என்றாலே தெய்வம் தானே...அனால் என் தாய் தெய்வத்திற்கே தெய்வமானவள் .....

அவள் பட்டினி கிடந்து நான்பல முறை பார்த்திருக்கிறேன்...என்னை ஒருநாளும் பட்டினி போட்டதில்லை...

நான் பள்ளி செல்லும் வேளையிலே தன் காதணியை விற்று எனக்கு காலனி வாங்கி கொடுத்தவள்...

கோபித்து கொண்டு சாப்பிடாமல் நான் படுத்தால்,எனை சாப்பிட வைக்க அவள் செய்யும் உத்திகளை செத்தாலும் நான் மறவேன்...


கட்டிய கணவன் உதறிவிட்டு சென்றாலும் ஊர்தேடி வயல் மிதித்து என்னை வளர்க்க நீ பட்ட கஷ்டத்தை உள்ளளவும் மறவேனே.....

திசை மாறி  சிறு வயதில் சாடையிலே அடி வாங்கி திக்கற்று நின்றவனை ,கைபிடியாய் கூட்டி வந்து காலிற்கு மருந்திட்டவளே ....

இப்படி இன்னும் எத்தனையோ......மரணம் தான் வந்தாலும் மறவேனோ உன் அன்பை...

வாய் பேச முடியாமல் ஊமையாய் இருந்தாலும் ஊரில் உள்ள வயலெல்லாம் உன் வருகை கேட்டிருக்கும்....

தினக்கூலி நீ செய்து என் திருமணத்திற்கு பணம் சேர்க்கும்  உனைப்போல ஒரு தாயை
இன்றேனும் உணர்ந்தேனே....

இதனையும் என்னக்காக செய்த உனக்கு என்ன வேண்டும் என கேட்டேன்....
''நீ நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும் என நீ சொன்ன'' வார்த்தையை 
வேறெந்த உறவும் பொய் கூட சொல்லலையே.....

இதெலாம் போக எனக்கு இருகிறதம்மா இனொரு ஆசை....பணம் தேடி அலையும் எனக்கு,பட்டினியே அறியாத எனக்கு  ஒரு வாய் சோறு உன் கையில்.......