Thursday 7 February 2019

புவி{உலகம்} வெப்பமயமாதல்..!

புவி வெப்பமயமாதல்:
                               புவி வெப்பமயமாதல் என்பது புவி மேற்புற பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சீரான வெப்பநிலை உயர்வை குறிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புவியின் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது......
                                  சரி புவி வெப்பமயமாதல் பத்தி
 உலகத்துல ஏதோ ஒரு மூலைல 
ஆசிய கண்டத்துல, 
இந்திய நாட்டுல, 
தமிழ்நாடுன்னு ஒரு மாநிலத்துல, 
சேலம் மாவட்டத்துல,
மேட்டூர் வட்டத்துல,
கொளத்தூர் ஒன்றியத்துல,
தின்னப்பட்டி பஞ்சாயத்துல,
 இருக்குற ஒரு கிராமத்துல ஓலை குடிசைல வாழ்க்கை நடத்துற இந்த தமிழன் வீரமணி ஏன் பேசணும்னு யோசிக்காமல் இருக்க முடியாது உங்களுக்கு அப்படித்தான...!

உலக வெப்பமயமாதல்ல உங்க ஊரு சான் பிரான்சிஸ்கோ  என்ன எங்க ஊரு தின்னப்பட்டி என்ன எல்லாமே இந்த உலகத்துல தான இருக்கு..
சரிங்க நான் விடயத்துக்கு வரேன்..
           புவி வெப்பமயமாதல் இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான முக்கிய பிரச்சினையாகும். புவி வெப்பமயமாதல் 17000 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. அதற்கு
முன்பே கூட புவி வெப்பநிலையில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அந்த வெப்பநிலை உயர்வு இயற்கையானதாகும்.
                  மனித நாகரிகம் தோன்ற இந்த வெப்ப நிலை உயர்வு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. முதன் முதலாக உலகின் வட மற்றும் தென் துருவங்களில் இருந்த பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகத் தொடங்கின. ஆங்காங்கே இருந்த ஏரிகளும், நீர்நிலைகளும் நதிகளாக மாறின. இதன் தொடர்ச்சியாக கோடான கோடி டன் பனிப்பாறைகளும் உருகி நதிகளாக ஓடி கடலில் கலந்து கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது(குமரிகண்டம் எனும் தமிழ் பேரினம் தாங்கிய கண்ட அழிவு  கூட இது போல இயற்கை காரணியாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது)
இன்றைய சூழலில் ருவநிலை மாற்றம் குறித்து இந்தியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் இந்தியாவின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 70 ஆண்டுகளில் அதிவேகமாக அதிகரித்து வருவதை உறுதி செய்திருக்கிறது.
1951-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான இரு வெவ்வேறு வெப்பநிலை தரவுகளிலிருந்து, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடையேயான வெப்பநிலை அதிகரிப்பைக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்காக இந்தியா முழுவதும், 395 வானிலை ஆய்வு மையங்களில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன. கோடை, பருவ மற்றும் குளிர் காலகட்டங்களின் அன்றாட சராசரி வெப்பநிலை தரவுகளைக் கொண்டு அறிவியலாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
வடமேற்கு இந்தியாவில் 1970-களில் தொடங்கிய வெப்பமயமாதல், 2000-களிலும், 2010-களிலும் அதிவேகத்தில் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், ஏப்ரல் – மே மாதங்களில் நிலவும் தினசரி அதிகபட்ச வெப்பநிலையின் பத்தாண்டு சராசரியானது, 2010-களில் 40°செல்சியஸ் முதல் 42°செல்சியஸ் அளவிற்கு இருந்துள்ளது. 1950-களில் மத்திய இந்தியாவின் தென்பகுதியிலுள்ள ஒரு சிறு பகுதியில் மட்டுமே இத்தகைய அதிக வெப்பநிலை கொண்டதாக இருந்துள்ளது. அதுவும் அதிகபட்சமாக 41°செல்சியஸ் அளவுக்கு மட்டுமே வெப்பநிலை இருந்தது. 1970-களில் தான் பெருமளவு நிலப்பரப்புகள் 40°செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையைத் தொட்டன.
1990களில் ஒரு குறுகிய காலகட்டத்திற்கு வெப்பநிலை தணிவடைந்தது. பின்னர், 2000-களிலும் 2010-களிலும் பெருமளவிலான நிலப்பரப்புகள், 40ºசெல்சியசுக்கு அதிகமான வெப்பநிலையை அடைந்தன. அதேபோல 41ºசெல்சியசுக்கு அதிகமான வெப்பநிலையை தொட்ட பகுதிகளும் அதிகமாகின. 2010-களில் மத்திய இந்தியாவின் தென்பகுதியில் பெருமளவு பரப்புகள் 42ºசெல்சியஸ் வெப்பநிலை நிலையைத் தொட்டன இதில் தமிழகத்திலும் தென் இந்திய நிலபகுதிகளிலும் மிகவும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே...
இந்த உலக (புவி) வெப்பமயமாதலுக்கு என்னதான் காரணம்?
3000 ஆண்டுகள் தொடர்ந்து பனிக்கட்டி உருகியதால் ஏற்ப்பட்ட கடல் நீர் மட்ட உயர்வை விட இன்று ஒரு நூற்றாண்டில் ஏற்ப்படும் கடல் நீர் மட்ட உயர்வு அதிகம். தற்போது நாம் வெளியேற்றும்அதிகப்படியான கார்பன் மற்றும் அவற்றின் கூட்டுப்பொருள்களின் அளவினால் உலக வெப்பநிலை உயர்வு வேகமாகவும், அதிகமாகவும் நிகழ்ந்து வருகிறது.
விளைவு:
  20 ஆம் நூற்றாண்டில் மட்டும் 17 செ.மீ கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் இது மேலும் 18-50 செ.மீ உயரும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. கடல் நீர் மட்டம் உயர்ந்த பொது ஏராளமான உயிரினங்கள் அழிந்து போயின. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து கடல் நீர் மட்ட உயர்வினால் அழிந்த உயிரினங்களில்  மனித இனமும் ஒன்று. என்ற நிலை வரலாம்.
கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்தையும் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாகவும் உணர்கிறோம். இவைதான் நாம் அனுபவிக்கும் தட்பவெப்ப நிலைகள். ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக் குறிப்பது. மழை, சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இவையே ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் காரணிகள்.
சீதோஷ்ணநிலை மாற்றங்கள் திடீரென்றும், வெளிப்படையாகவும் ஏற்படும். ஆனால், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு நீண்ட காலமாகும். அதனால் அந்தளவுக்கு உடனடியாக அவற்றை உணர முடிவதில்லை. பூமியில் பலவிதமான தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து வகையான உயிரினங்களும் அவற்றுக்கேற்ப இயல்பாகத் தம்மைத் தக்கவைத்து கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் கடந்த 150-200 ஆண்டுகளில் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்டுவருகின்றன. சில குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ள முடிவதில்லை. மனிதனுடைய நடவடிக்கைகளே இப்படிப்பட்ட மாற்றங்கள் இவ்வளவு வேகமாக நடைபெறுவதற்கான காரணம் என்று கருதப்படுகிறது. 
மனித நடவடிக்கையா ?
  பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன.  கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல (கிரீன்- ஹவுஸ்) வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக் கிரகித்துக்கொள்கிறது. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி சூரியக் கதிரியக்கத்தின் அதிகப்படியான ஆற்றலைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியில் வெளிப்படுத்தப்படும் சக்தியை கிரகித்துக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. அதனாலேயே அந்த வளிமண்டல அடுக்கு ஓசோன் எனவும் அழைக்கபடுகிறது..(இப்பதான் ஓசோன் ஓட்டை நியாபகம் வருதா? வரணுமே..)
நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களை நாம் எரிக்கும்போது, கார்பன் - டை - ஆக்ஸைடு (கரிம வாயு) வெளியேற்றப்படுகிறது. நாம் காடுகளை அழிக்கும்போது, மரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்பன் வாயு மண்டலத்தில் கார்பன் - டை - ஆக்ஸைடாகக் கலக்கிறது. அதிகரித்துவரும் விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றங்கள்[இரசாயன உர பயன்பாடு,இயந்திர பயன்பாடு] மற்றும் வேறுசில நடவடிக்கைகள் இவை அனைத்தும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை அதிகரிக்கச் செய்கின்றன.மேலும் மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகை ஓசோனை மிகவும் பாதிக்கின்றது.
அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கம் உணவுக்கான தேவையை அதிகரிக்கிறது. இதனால் இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. வெப்பநிலையில் ஏற்படும் வேறுபாடுகள், தட்பவெட்ப நிலை மற்றும் மழை ஆகியவற்றில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம், விவசாயத்தை நேரடியாக பாதிக்கிறது. மண்வளம், பூச்சிகள் மற்றும் நோய்களின் மாற்றங்கள் மூலமாக மறைமுகமாக விவசாயத்தை பாதிக்கிறது. தானிய வகைகளில் விளைச்சல் இந்தியாவில் வீழ்ச்சியடையும் என்று  ஆய்வுகள் கூறுகிறது . மிகக் கடுமையான வெப்பம், மிக அதிகமான மழை, வெள்ளம், வறட்சி முதலிய அதீதமான சீதோஷ்ண நிலைகளும் விளைபொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன.இது மனித இனத்திற்கு பெரும் சவாலாக அமைய போகிறது.[ மனிதன் மட்டும் அல்லாது நம்மோடு வாழ்ந்து நம்மை வாழ வைக்கின்ற இந்த பல்லுயிர் கட்டமைபுக்குமே சவால் தான்]
இதனால நமக்கு என்ன பிரச்னை :
 கடல் மட்ட உயர்வு. கடல்நீர் வெப்பமடைதல், பனிப்பாறைகள் மற்றும் போலார் பனி படிவுகள் உருகுதளால், அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரை மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால், மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அதிகரிப்பது, நீர்நிலைகள் உவர்ப்பாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இவை, கடல் பகுதி விவசாயம், குடிநீர் ஆதார வளங்கள், மீன்பிடி தொழில், மக்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போகுதல். வெப்பமயமாதல்  மனிதகுல ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும். உடலில் நீரிழப்பு, தொற்று நோய் பரவல், ஊட்டச் சத்துக் குறைபாடு, பொது மருத்துவம் சார்ந்த உள்கட்டமைப்பைப் பாதித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.  காடுகள் மற்றும் வன விலங்குகள் இயற்கையான சூழலில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வெகு விரைவில் பாதிக்கப்படுகின்றன. வெப்பமாற்றத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்தால், பல்வேறு தாவர இனங்களும், விலங்கினங்களும் அழியக்கூடிய நிலை ஏற்படலாம்.இதில் மனிதன் விதி விலக்கு அல்ல என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன் எம் அன்பு மனித உறவுகளே..!
இவ்வுளவு பெரும் துயரை எப்படி மாற்றுவது?
பெருகி வரும் தொழில்மய நடவடிக்கைகளும் அதனால் விளையும் பெருங்கழிவுகளும் (அணு மற்றும் அனல் மின் திட்டங்கள்,துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர்மயமாதலால் விளையும் கழிவுகள், போன்றவை) வெப்ப நிலை அதிகரிப்பிற்குக் காரணாமாக உள்ளன. நகராட்சிக் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் 80%க்கும் மேல் நச்சு இரசாயனங்கள், கனஉலோகங்கள், திட உயிர்க் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டது. சூடான தொழிற்சாலைக் கழிவுகளும் கடல் நீரில் கலக்கப்படுகிறது.அங்கிருந்து நீர் ஆவி மேகம் மழை என தம் அன்றாட பணிகளை செவனே செய்கிறது இயற்கை எனும் இப் பேரியக்கம் கொண்ட உருண்டை..!
நம்மால் முடிந்தது..

  1.  புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் உபயோகங்களைக் குறைத்துக்கொள்தல் (நிலக்கரி போன்ற எரிபொருட்கள்).
  2. எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முக்கியமாக பெரிய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகைமண்டலத்தை மாசு கட்டுப் பாட்டு வாரியம் தடை செய்ய வேண்டும்.
  3. புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களின் உபயோகத்தை அதிகரித்தல்- சூரிய மற்றும் காற்று ஆதாரங்கள் முதலியவை.
  4. அதிக அளவில் மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலும் மரங்களை வளர்த்தல்.
  5. மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களின் கண்மூடித்தனமான உபயோகத்தை தவிர்த்தல்.
  6. மின்சாதன பொருட்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்துதல்.(குறிப்பாக கைபேசி,குளிர்சாதன பெட்டி,குளிரூட்டி போன்ற அதிக வெப்பத்தை வெளியேற்றும் பொருட்கள்)
இன்றைய சூழலில் நம் மனித இனம் தொழில் நுட்பத்தில் அதீத வளர்ச்சி கொண்டுள்ளது.ஆனால் மனிதனால் மனிதனை தவிர உலகில் வேறெதையும் உயர்புடன் உருவாக்க முடியாது என்பது அந்த தொழில்நுட்பத்திற்கும் தெரியும்..
இந்த மண்ணில் நேற்று பிறந்த அனைவருக்கும் இன்று பிறவா நாளைய சந்ததிக்கு இயற்கையை அப்படியே கையளிக்கும் ஆகச்சிறந்த பொறுப்பு இருப்பதை நாம் மறந்துவிட கூடாது..

மரங்களை காப்போம் :மனிதம் மீட்போம்
என்றும் அன்புடன்
தமிழன் வீரமணி....