Tuesday 1 January 2019

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ! தமிழ் புத்தாண்டு வெறுப்பு !

ஆண்டு என்பது என்ன?
            ஒரு ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே ஒரு  வருடத்தின்  கால அளவாகும்.
தமிழ் இனத்தின்  புத்தாண்டு ...!
நாம் இன்று பெரிதும் அறிந்த பஞ்சாங்கத்தின் அடிப்டையில்  சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது வேறெந்த மொழிகளிலும் இதுபோல நேரத்தோடு கணிப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.
கொண்டாட்டம் ....!
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். 
மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.
புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்
. வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.
தமிழர்களின் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர்.
 அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது.
 போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.
இப்படி உலகின் மிக பழமையான வானியல் முறையை அடிபடையாக வைத்து காலங்களை கணித்த நம் முன்னோர்களின் வாழ்வியலையும் விழாக்களையும் தவிர்த்து ஆங்கிலேய பழக்க வழக்கங்களில் மூழ்கி நம்மை நாமே சிதைத்து கொண்டிருக்கிறோம் என்பதே வேதனை...

ஆங்கில புத்தாண்டு....!
 ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரேக்கர்களின் ) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை [ஆங்கிலேயர்களில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் டிசம்பர் 25 -ம் நாள் அவர்களுக்கான புத்தாண்டு என அறிவித்தனர்-பின்பு இக்கருத்தும்  மாற்றப்பட்டது]  என்பதே உண்மை.

இன்றைய சூழலில் ஆங்கில மொழி ஒரு உலகப் பொதுமொழி. ரோமன் எண்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாள் காட்டியாக விளங்குகிறது ஆங்கிலப்புத்தாண்டு.
 இதனை மதம், மொழி, நிறம் வேறுபாடின்றி கொண்டு சிறப்பிபதில் தவறில்லை. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் தமது நாட்டின் அடிப்படை கலாசாரத்தை மறந்து தவறான வழிகளில் இன்றைய இளைஞர்கள் செல்வது சற்று மன சங்கடமான விடயமே...

.................வாழ்க தமிழ் ,வளர்க எம்மக்கள் ....


என்றும் அன்புடன் 
 தமிழன் வீரமணி