Saturday 29 December 2018

ஜாதி இரண்டொழிய வேறில்லை....!

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.......
                            இவ் வார்த்தைகள் நம் மூதாதை ஔவை பாட்டி நமக்கு கூறிய சிறப்பான நெறி ஆகும்...
    ஒளவையார் சாதி என்று குறிப்பிடும் பொழுது மனிதர்கள் 
பிறப்பால் உருவாக்கி கொள்ளும் சாதியையோ 
அல்லது பாலின (ஆண்,பெண்) அடிப்படையில் உருவாகும் சாதியையோ 
குறிப்பிடவில்லை!
மாறாக மண்ணில் யாரெலாம் நீதி வழுவாமல் வாழ்கிறார்களோ அவர்கள் உயர்ந்த சாதி 
நீதி நெறி தவறி வாழ்பவர்கள் தாழ்ந்த சாதி என மே[மெ]ன்மையான கருத்தை விதைக்கிறார்.....ஆம் என் அன்பிற்கினிய மனித உறவுகளே!
      இம்மண்ணில் மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் உலகின் விருந்தினர்களே இங்கே நிலைப்பவர் எவரும் இல்லை...விருந்திற்கு வந்த இடத்தில் நம் விலை மதிப்பற்ற மன[ஆன்ம]உணர்வை சாதியும்,மதமும் சிதைத்து விட்டால் விருந்தேப்படி சுவைக்கும்..
நம் வாழ்வு எப்படி சிறக்கும்..

     அக்காலத்தில் சாதிகள் என்பது  நம் முன்னோரின் தொழில், வாழ்க்கை முறை, புகழ் அல்லது பட்டம் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை தெரியப்படுத்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்ந்தது. இன்று அவையே வேரூன்றி ஆலமரம் போல் அசைக்க முடியாமல் மனித சமூகத்தில் வேற்றுமையைக் காட்டும் சாதிகளாக நடமாடி வருகின்றன. 

இதில் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ பிரித்துப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. எனவே சாதிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சாதிகள் ஏற்றபட்ட காலத்தில் அவை பிறப்பை மையமாகக் கொண்டு அமையவில்லை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டே அமைந்தது. மற்றும் அவை ஒருவனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ நிரந்தரமாகவும் அமைந்தவை அல்ல, அதாவது அவன் செய்யும் தொழில் மாறுபட்டால் அவன் சாதியும் மாறும் 
ஆனால் இன்று சாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. 
ஒருவர் என்ன தொழில் செய்தாலும் சாதி மாறாத் தன்மையுடன் திகழ்கின்றது. இது இடையில் ஏற்பட்ட மாறுதல்களே ஆகும். இவற்றை நாம் மாற்ற வேண்டும். 
மனிதன் தோன்றியது ஓருயிரில் இருந்துதான் என்ற கருத்தை அனைவரும் ஒத்துக்கொள்கிறோம். அப்படியிருக்க அனைவரும் ஒருவருக்கொருவர் உறவுமுறை கொண்டவராக இருக்கவே வாய்ப்புண்டு இதில் எங்கிருந்து வந்தது இந்த ஏற்றத் தாழ்வு?
 உயர்ந்தவன் தாழ்ந்தவன் ?
ஒவ்வொரு சாதியும் எப்படி உருவாகியது, அதன் அர்த்தம் என்ன, அதன் வரலாறு என்ன என்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தன் சாதிதான் பெரிது என்று பேசுகிறவர்கள் கூட‌ அவர்களின் சாதியின் வரலாறு என்ன என்று அறிந்திருக்க மாட்டார்கள். 
அப்படி அறிந்திருந்தால் ஏற்ற தாழ்வு பேசமாட்டார்கள் தானே...
இங்கு நான் படித்து கண்ட,கடந்த சில விடயங்களை உங்களோடு பகிர விரும்புகிறேன்.
மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான்.  ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது. அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர்.  இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள்  தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன.  இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே சாதிகள்.

ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும்.  அண்ணல் அம்பேத்கர் ஒருவித வரலாற்றுச் சட்டகத்தை மனதில் கொண்டு  இத்தகைய போக்கை பிராம்மணீயம் என அழைக்கிறார். ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை.மனிதர்கள் அனைவரும் ஒன்றே, சாதி வேறுபாடுகள் காலாவதியானவை என்கிற எண்ணமே மானுடநேய எண்ணமாகும். ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.

இக்கட்டுரையை எழுதும் நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவனாக எனுடைய பிறப்பு பதியப்பட்டுள்ளது எனில் என்னை மிகவும் பிற்படுதியவர் யார்?
ஆதி காலம் தொட்டு இன்றுவரை பல பரிணாம வளர்ச்சிகளை கடந்து மனிதன் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஜாதி எனும் பெரும் சுமையை தூக்கி சுமக்கலாகாது.எனினும் ஜாதி என்னுடைய அடையாளம் என கூறும் என் அன்பிற்கினிய உறவுகளுக்கு ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...

இன்று உலகமே பார்த்து பரிதாபப்படும் வறுமையின் உச்சியில் தினம் தினம் பல்லாயிர கணக்கான மனித உயிர்கள் மண்ணில் செத்து விழும் #சோமாலியா நமக்கான புகட்டே...
இயற்கை வளங்களை மட்டுமல்ல மனித மனங்களையும் பாதுகாக்க தவறியதே இன்றைய அவல நிலைக்கு காரணம்..ஆம் உறவுகளே சோமாலிய மக்கள் தங்களுக்குள் பல்வேறு ஜாதிய கட்டமைப்புகளாலேயே அவர்களின் ஒற்றுமை சிதைந்து போனதாகவும் ,அவர்களிடம் ஒற்றுமை இல்லாமல் போனதே அவர்களால் இந்த சர்வதேச வல்லாதிக்க சக்திகளை எதிர்கொள்ள முடியாமல் அழிவின் விளிம்பிற்கு வந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்..

       "உலக வரலாற்றில் ஜாதியால் சாதித்தவர்கள் யாருமில்லை 
                சாதித்தவர்களில் யாரும் ஜாதி பார்த்ததில்லை"  



வேதமறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்
சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.
நாலு குலங்கள் அமைத்தான் அதை
நாசமுறப் புரிந்தனர் மூடர்
சீலம் அறிவு தருமம் இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

      ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை,
 மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை,
 ஏவல்கள் செய்பவர் மக்கள்
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்
மானிடர் வேற்றுமை இல்லை
சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
                தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலவர் கீழவரென்றே வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.
 கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்
                கொண்டு வைய முழுதும் பயனுறப்
                பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

...............ஆயிரம் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.     பாரதி ,,,,

மனதில் பட்டதை பதிந்தேன் ..மாற்று கருத்திருந்தால் மறவாமல் கருதிடுக..

என்றும் அன்புடன் 
    தமிழன் வீரமணி .


No comments:

Post a Comment