Thursday 25 April 2019

நீர் அற்ற நிலம் ...

                                          

இன்றைய முக்கிய செய்திகள் :
            ஏப்ரல் 12 ம் தேதி இரவு 11:59pm மணி முதல் நாட்டு குடிமக்களுக்கு "குடிநீர் "வழங்கப்படமாட்டாது என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இதர செய்திகள்:
             நாட்டின் அனைத்து பகுதி மக்களும் குடிநீர் தேடி அலைவதால் நாட்டின் முக்கிய வீதிகளில் நெரிசல் அதிகரித்துள்ளது.
அறிவிப்புகள்:
             குடிநீரை வீணாக்கும் நபர்களுக்கு 10நாள் சிறை தண்டனையுடன் ரூபாய் 25000/- அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
             குடிநீரை பதுக்குவோர்கள் முன் அறிவிப்பின்றி நாடு கடத்தபடுவர்-வெளியுறவு துறை அமைச்சர் 

வணக்கம் நண்பர்களே!
           இது என்னடா புது கதையா இருக்குனு பாக்குறிங்களா? இது வேடிக்கை இல்லை உறவுகளே எச்சரிக்கை!
                  தென் ஆஃப்ரிக்காவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள, சுமார் மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் கேப் டவுன் நகரத்தில் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் இரண்டு சதவீதத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மழை 1%அளவுக்கும் குறைவாகவே பொழிந்தது இதனால் தண்ணீர் பயன்பாட்டை குறைப்பதற்காக ஒரு குடும்பத்திற்கு  ஒரு நாளைக்கு நூறு லிட்டர் தண்ணீர் அளித்துவந்த நிலை மாறி தற்போது வெறும் 50 லிட்டர் மட்டுமே அளிக்கப்படும் என கேப்டவுன் நகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு புதன் கிழமையும்(waterless Wednesdays) தண்ணீர் இல்லாத நாளாக எண்ணி, மக்கள் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

  ஏப்ரல் 12 ம் தேதி அன்று கேப்டவுன்னில் எந்த குழாயிலும் தண்ணீர் வாராது என்றும் அந்த நாளை 'ஸிரோ டே' (Zero Day)என்றும் கேப்டவுன் நகராட்சி அறிவித்துள்ளது.
''பொது இடங்களில் தண்ணீர் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கேப் டவுன் விமான நிலையத்தில் உள்ள விழிப்புணர்வு பதாகைகளில் தண்ணீர் பஞ்சம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால், குறைந்த அளவு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. தண்ணீர் இல்லாததால், மால் போன்ற இடங்களில் கழிவறைகளை பயன்படுத்துவதை மக்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் கட்டாயமாக தண்ணீர் கொடுத்து அனுப்பவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,''.
தண்ணீர் மறுபயன்பாடு செய்வது ஊக்குவிக்கப்படுகிறது. 
'குளியலறையில் இருந்து வெளியாகும் தண்ணீரை, கழிவறைக்கு பயன்படுத்துகிறோம். புதன் கிழமைகளில், குளிப்பதற்குப் பதிலாக ஒரு பெரிய துண்டில் தண்ணீரை நனைத்து, உடலை துடைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவித்துள்ளார்கள். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது அல்லது கார் போன்ற வண்டிகளை தண்ணீரில் கழுவுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அந்நாட்டின் அரசு அறிவித்துள்ளது.மேலும் வீடுகளில் பாத்திரங்கள் கழுவும்போது, முதலில் எண்ணெய் கறைகளை காகிதத்தால் துடைத்துவிட்டு, பின்னர் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு பாத்திரங்களை கழுவிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை படித்தவுடன் "தண்ணீர் இல்லாமல் எப்படி இருப்பார்கள்" என்ற கேள்வி உங்கள் மனதில் எழும் என்பது எனக்கு தெரியும்!
அதனால் தான் உள்ளூர் வானொலி நிகழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாமல் சமைப்பது எப்படி, கழிவறைகளில் தண்ணீருக்கு பதிலாக மரத்தூளைப் பயன்படுத்துவது எப்படி போன்ற தகவல்கள் ஒலிபரப்பப்படுகின்றன.
கேப்டவுன் நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வெளியிடுகின்றனர்.
அதன்படி, கை கழுவுவதற்கு பதிலாக ரசாயன சுத்திகரிப்பான்களை பயன்படுத்தினால் ஒரு நாளில் ஒருவர் இரண்டு லிட்டர் நீரை சேமிக்கலாம் என்று கூறியுள்ளது.
குறிப்பாக ஒவ்வொருவரும் அவர்களின் வீடுகளில் குழாய்களில் இருந்து தண்ணீர் கசிவதை கட்டாயமாக நிறுத்தவேண்டும். தண்ணீர் கசிவதை கண்டறியும் வழிகள், சரிசெய்ய அழைக்கவேண்டிய உதவி எண்கள் நகராட்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி உலகின் முதல் நீர் அற்ற நகரமாக கேப்டவுன் நகரம் மாறிஇருப்பது இந்த ஒட்டுமொத உலகிற்கே அதிர்ச்சியான தகவல் மட்டுமல்ல எச்சரிக்கையும் கூட!
பொருளாதார முனேற்றம் மட்டுமே இலக்காக கொண்ட பல்வேறு சர்வதேச வல்லாதிக்க நாடுகள் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளை(நாடுகளை) ஆக்கிரமிப்பு செய்து அங்கு செறிந்துள்ள இயற்கை வளங்களை கொள்ளை கொள்வது இன்றைய பெரும் பணியாக செய்து கொண்டுள்ளார்கள்.
மனிதன் தான் எப்பொழுதுமே உலகின் மீதும் அதில் வாழ்கிற மற்ற உயிர்கள் மீதும் தன் ஆளுமையை நிறுவுகிறான்,இதன் காரணமாகவே இயற்கை நம் மீது பாரிய முறையில் தன் சீற்றத்தையும் அதீதமான கோவத்தையும் அவ்வபோது காட்டுகிறது என்கிற கூற்று மறுப்பதற்கில்லை..!
உலகின் பல்வேறு நாடுகள் இன்று நீர் பொருளாதார கொள்கைக்கு வந்து விட்டது.இன்னும் பத்து ஆண்டுகளில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நீர் மற்றும் உணவு இருப்பு வைத்திருபவர்கள் பெயரே முன் நிற்கும்.
பல்வேறு நாடுகளும் இனங்களும் தங்களுக்கு உள்ள பலத்தினை பயன்படுத்தி தினம் தினம் பல்வேறு விதமான போர்களை செய்துகொண்டே இருக்கிறார்கள்.இரு பெரும் உலக போர்களையும் தாண்டி இந்த நூற்றாண்டில் பயணித்து கொண்டிருக்கும் மனித இனத்திற்கு இந்த பூமி பந்து தனக்கானது இல்லை என்கிற புரிதல் எப்பொழுது வரும் என்பது தெரியாது ஆனால் விரைவில் அந்த நாளுக்காகத்தான் காத்திருகின்றோம் என்பது மட்டும் நிதர்சனம்.
சர்வதேசத்தால் தான் உயர்ந்தவன் என்று கருதிக்கொள்ளும் அமெரிக்காவின் சூழலியல் அறிஞர் கூறுகிறார் "நாங்கள் நடத்தும் எந்த போரின் போதும் மனிதனால் ஒருபோதும் உருவாக்க முடியாத நீர் நிலைகளின் மீது தாக்குதல் நடத்த பட்டதில்லை.ஒரு வேலை எதிர்பாரா விதமாக நீர்நிலைகள் பாதிக்கப்பட்டால் அந்த நிலம் யாருக்கும் பயன்படவும் போவதில்லை" என்கிற செய்தியை கூறுகிறார்.
இதன்மூலம் நான் கூற வரும் செய்தி:பூமியில் 30 சதவீதம் மட்டுமே நிலப்பகுதி. மீதமுள்ள 70 சதவீதம் நீர்ப்பரப்புதான்.70 சதவீத பரப்பளவு நீர்இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 
இன்று 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது.அதற்கு மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. நம் முன்னோர்கள் கோடைக்காலம் துவங்கி விட்டால், வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பர். வழியில் செல்வோர் அந்நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளட்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவ்வாறு செய்யப்பட்டது.அதுபோன்றதொரு காட்சியை தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா? 
இப்போதும் காண முடிகிறது; வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நீர் நிரம்பியதாக அல்ல. நீரை நிரப்ப எப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள்தான் அவை.அதுமட்டுமா நாம் தேர்ந்தெடுத்த அரசே குடிநீரை விற்பனை பொருளாக சந்தை படுத்துவதுதான் கொடுமை!
எனவே நிலத்தடி நீரைப்பாதுகாக்க வேண்டியதும், நீர்ஆதாரங்களை காக்க வேண்டியதும், நீர் மாசுபடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் தலையாய கடமை.
இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்பது அடிப்படை உண்மை, ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த ஐம்பூதங்களையும் மாசு
படுத்துகின்றோமே தவிர, வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து கொண்டே தங்களின் இருப்பை தக்கவைத்து கொள்கிறோம்.
வெறும் மனிதனுக்கான தேவை தான் என்பது போல தண்ணீரை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீணாக்குகிறோம் அனால் தண்ணீர் ஒட்டுமொத உயிர் தேவை என்பதை எப்பொழுது நாம் உணர்கிறோமோ அன்றுதான் நாளைய தலைமுறையின் நீர் தேவை உறுதி செய்யப்படும்.

இப்படியே போனால் இன்னும் சில நுாற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். 
மக்கள் குடிநீருக்காக ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொள்ளும் நிலைதான் ஏற்படும். எனவே எம் அன்பான உறவுகளே இயற்கையை விற்பதும் வாங்குவதும் நம்மை நாமே கொலை செய்துகொள்வதாக ஆகும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் தண்ணீரை சேகரிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற 
வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

* பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்க வேண்டும். இதன் மூலம் ஒரு 
நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.
* தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் குழாயை அடைத்து விட 
வேண்டும்.
* வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதனை நாம் கண்டிப்பாக அடைக்க 
வேண்டும்.
* 'ஷவர்'ல் குளிக்கும்போது அதிக நேரம் நின்றுகொண்டு தண்ணீரை வீணடிக்க கூடாது. 'ஷவர்'ல் குளிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
* வெயில் காலங்களில் 'ஷவர்'ல் குளிப்பதற்கு பதிலாக ஒரு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு குளித்தால் நீரினை சேமிக்க முடியும்.
* வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்கும்போது முழு கொள்ளளவு துணிகளை பயன்படுத்த வேண்டும். குறைவான அளவுதுணிகளை மட்டுமே துவைக்கும் போது, அதிகமாக தண்ணீர் செலவாகும்.
* வீட்டில் மினரல் வாட்டர் பிளான்ட் போன்ற தண்ணீர் வடிகட்டும் கருவியை பயன்
படுத்தும்போது, வீணாக செல்லும் தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து அதனை துணி துவைக்கவோ அல்லது பாத்திரம் கழுவவோ பயன்படுத்தலாம்.
* தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் போது, தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* லாரியில் தண்ணீரைபிடிக்கும்போது போட்டிபோட்டிக் கொண்டு நீரை வீணடிக்காமல் பொறுமையாக தண்ணீர் பிடிக்கலாம்.
வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்து மண்ணோடு உன்னை இணைத்துக்கொள்
 ""உயிர் படைத்த உன்னை வதைத்தால் எப்படி வலிக்குமோ அதே போலத்தான் உயிர்களை படைத்த இயற்கையை வதைத்தாலும் வலிக்கும்""


என்றும் அன்புடன் 
   தமிழன் வீரமணி