Thursday 26 April 2018

ஓதிமலைக்குச் செல்வோம் வாருங்கள்.....

   வணக்கம் அன்பர்களே....
                     சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது  ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது  .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து  முகங்களும்  , எட்டு  கரங்களும்  கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . 

ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது.
 கோவில் 1800  செங்குத்தான படிகளை  கொண்டது, மலையேற  சற்று சிரமமாகத்தான் இருக்கும்..  கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.
   



புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..

சுவாமிமலையில்  சிவனுக்கு பிரணவத்தின்  பொருளை  உணர்த்திய   முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை  உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.
பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர்  ஒதிமலையில் முதலில்  முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில்  பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது .
ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை   செய்யப்பட்டதாகவும்  சொல்லப்படுகிறது ...
தலம் மூலம்...

படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல்  நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே  படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

படைக்கும்  கடவுளான  பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து  உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”
எனப்பட்டது.

முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய
ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.என இத்திருத்தலத்தின் வரலாற்றையும் பெருமையும் அடுக்கிகொண்டே செல்லலாம்..


இத்திருத்தலத்தின் தரிசனத்தின் போது பல்வேறு ஆச்சர்யங்களையும் அனுபவங்களையும் பெற்றோம்...
 தமிழ்கடவுள் முருகனின் அற்புதமான தோற்றம் காண நீங்களும் வாருங்கள்...குமரனின் அருளை பெற்றிடுங்கள்....

Thursday 5 April 2018

மேட்டூர் அணையில் மூழ்கிய 60 ஊர்கள் பற்றி தெரியுமா?

வணக்கம் நண்பர்களே.......
                       சமீபத்தில் நமக்கு வெகுவாக தெரிந்த விடயம் காவிரி மேலாண்மை வாரியம் .....அதை பற்றிய புரிதலே நாமில் பலருக்கு இல்லை 
அனால் புரிதல் நிச்சயம் வேண்டும் .சங்க காலம் தொட்டே காவிரி தமிழகத்தில் பாயும் நதி மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு பாயும் தன்மை கொண்டதுதான் நீரின் குணம் .காவிரியும் அப்படிதான் பாய்கிறது ,அது பாயும் வழியில் தான் தமிழகத்தின் பெரிய அணையாக திகழ்கிற மேட்டூர் அணை உள்ளது.இந்த அணை 1934 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது .

     முன்பு இந்த பகுதிகள் யாவும் [தருமபுரி தொடங்கி தஞ்சை வரை] சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது .பிறகு பல்வேறு மன்னர்களின் படையெடுப்பால் காலம் கடந்து சென்றது.
 உலகின் பல நாகரீகங்கள் நதிக்கரையில் உருவானது  என்று நமக்கு தெரியும்  அதேபோலத்தான் காவிரி ஆற்றங்கரையிலும் நம் முன்னோர்கள் ஆயிரமாண்டுகள் போற்றத்தக்க விதத்தில் வாழ்ந்தார்கள் ,பிறகு 

மதுரை சுல்தான் ஆட்சி (1323-1370)

விஜயநகர நேரடி ஆட்சி(1370-1529)

நாயக்கர்கள் ஆட்சி(1529-1697)

17ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆட்சி

மொகலாயர் ஆட்சி (1697-1801)

ஆங்கிலேயர்கள் ஆட்சி (1801-1947 வரை நாம் கண்ட இன்னல்கள் அதிகம் 
குறிப்பாக 1801 பின் பல மாறுதல்கள் ஏற்பட்டது.
   காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் வாழ்ந்த மக்கள் வேளாண்மை மற்றும் மீன்பிடிதொழில் மூலம் செல்வசெழிப்புடன் வாழ்ந்தார்கள்... 
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் 1824ம் ஆண்டில் இருந்து இந்த அணையை கட்ட தீர்மானம் போடபடிருந்தது.அனால் அபோது அந்த திட்டம் சாத்தியப்படவில்லை ,ஆனாலும் தொடர்ந்து ஆங்கிலேய அதிகாரிகள் அணைக்கான ஒப்புதல் பெற முயற்சி செய்தனர்..
அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
1924-ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டது. அப்போது அணை நீர்த்தேக்க பகுதிகளில் சாம்பள்ளி, கோட்டையூர், பண்ணவாடி,சோழப்பாடி,காவேரிபுரம்,கோட்டையூர்,நேயம்பாடி,மல்லப்பாடி,நாகமலை,கோட்டை துறை உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தன. இந்த கிராமங்களில் வசித்து வந்த மக்கள் மேட்டூர் அணை கட்டுமான பணிகள் தொடங்கியதால் தங்களது வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டுவிட்டு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.


மற்ற மாவட்ட மக்களும் நலம் பெற வேண்டும் என தங்களின் பூர்வீகத்தை விட்டு கையில் கிடைத்த தானியங்களையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வெவ்வேறு இடங்களில் குடியேறினார்கள்.
பல தலைமுறைகள் வாழ்ந்த இடத்தை விட்டு தம் குடும்பத்தை கூட்டி வேறு இடங்களில் வாழும் மக்களின் மனநிலை [எம் ஈழத்தமிழ் மக்களின் ] நிலையே ....
 இன்றும் அங்கு கிறிஸ்தவ ஆலயம், ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலை ஆகியவை இருகின்றன, மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணை நீர்மட்டம் குறையும் போதெல்லாம் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கி இருக்கும் கிறிஸ்தவ ஆலய கோபுரம், ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலை ஆகியன வெளியே தெரிவது வழக்கம். அணை நீர்மட்டம் 79 அடியாக குறையும்போது கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரியும். நீர்மட்டம் 69 அடியாக குறையும் போது நந்தி சிலை வெளியே தெரியவரும்.
இப்படி வரலாற்றில் மறைக்கப்பட்ட[மறக்கப்பட்ட] மக்களின் வழியில் வந்த நானும் ஒருவனே ......

     வரலாறுகளை மண்மூடி மறைத்த காவிரி இன்று கோடிகணக்கானவர்களின் உயிர்நாடியாக உள்ளது பெருமை அனால் எங்கள் வாழ்வில் இன்னும் மாறாத வறுமை....


வாழ்க காவிரி ,
வளர்க எம் தமிழ்மக்கள்,....

Wednesday 4 April 2018

வெள்ளியங்கிரி மலையில் வேண்டாமே குப்பை

வணக்கம் நண்பர்களே....
                                     
 7வது முறையாக இறைவனின் தரிசனத்திற்காக வெள்ளியங்கிரி சென்று வந்தோம்...
                                        கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது, வெள்ளியங்கிரி மலை. கோவை நகரிலிருந்து, 34 கி.மீ., தொலைவில் உள்ள, இந்த மலையின் அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.இங்கிருந்து ஏழு மலை களைக் கடந்து சென்றால், வெள்ளியங்கிரி மலையுச்சியில் சுயம்பு வடிவமாக வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க முடியும்,இங்கு தண்ணீர் வசதி குறைவு எனவே அனைத்து பக்தர்களும் வீடுகளிலிருந்து பாட்டில்களில் தண்ணீர் எடுத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; தண்ணீர் காலியான பின், பக்தர்கள் பாட்டில்களை மலைகளிலேயே ஆங்காங்கே எறிந்து விடுகின்றனர்.

இதனால், ஏழு மலைகளிலும், எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாட்டில்களும், பிளாஸ்டிக் பாக்கெட்களுமாக பரவிக்கிடந்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில், குப்பைகளின் அளவு, பல மடங்கு அதிகமாக இருக்கிறது,
            இதை பார்த்த போது சென்ற வருடம் இங்கு சேகரிக்கப்பட்ட 85 மூட்டை குப்பைகளை விட அதிகமாக இருக்கும் என நினைக்கிறன்...[அவுளவு அதிகமான குப்பை]
         இங்கு வரும் பக்தர்கள் யாவரும் கடுமையான பயணத்தில் இறைவனை காண வருகிறோம் நாம்    நினைத்து பாருங்கள் ,மற்ற நாட்களில் இங்கே உலவிதிரியும் காட்டு விலங்குகள் இந்த நெகிழிகள்,மற்றும் பளிதீன்களை உண்டால் என்னவாகும்,,,
                  மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காது என்பதால் சுற்றுசூழல் அதிக அளவில் மாசடைந்து விடும் அல்லவா.?
நம்மை காக்கும் இறைவன் இருக்கும் மலையை அசுத்தம் செய்வது இறைவனையே பழிப்பதற்கு ஒப்பாகும்...
அதையும் தாண்டி பல பக்தர்கள் புகையிலை பொருட்களை(பீடி,குட்கா)வை மலையின் மீது பயன்படுத்துவதால் மலையின் புனிதம் கெடும் என்பது தெரிந்தும் செய்வது என்னவென்று சொல்வது....


இப்படியே குப்பைகள் குவிவது தொடர்ந்தால் பல்வேறு வனவிலங்குகளும், மரங்களும்,காடுகளும் இங்குள்ள ரம்மியமான காடுகளும் அழிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம்.மலையேறும் பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்.சுற்று சூழல் அமைப்புகள் வெள்ளியங்கிரி மலையின் பெருமையையும் அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் பக்தர்களிடம் எடுத்துகூற வேண்டும் என்பதுவும் தான் இந்த மலையை காப்பாற்ற கூடிய விஷயங்கள்.

ஒரு காலத்தில் இந்த மலையை தெய்வமாக கருதி அதன் மீது கால்படக்கூடது என்று இந்த மலை இருக்கும் திசையைப்பார்த்து வணங்க மட்டுமே செய்வார்கள். மலையேற கூட மாட்டார்கள்.இன்று மலையேறி பக்தியுடன் ஒரு உன்னத சூழலை அனுபவிக்கும் பல லட்சம் பக்தர்கள் இந்த மலையை அடுத்த சந்ததியினருக்கும் சுத்தமானதாக விட்டு செல்ல வேண்டும் அல்லவா?

தென்னாடுடைய சிவனே போற்றி...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....