Sunday 1 January 2023

மேற்கு தொடர்ச்சி மலை

வணக்கம் நண்பர்களே!
மேற்குத் தொடர்ச்சி மலையானது குஜராத்தின் தென் பகுதியில் தப்தி நதிக்கரையில் துவங்கி மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டம் வரை 1600 கிலோ மீட்டர் நீளம் நீண்டுள்ளது. அது மொத்தத்தில் 129037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பல்லுயிர்ப் பெருக்கம் உள்ள 34 பாரம்பரிய மிக்க முக்கிய இடங்களில் (Bio diversity hot spot) மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று என அறிவித்துள்ளது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவனா எனற பெருங்கண்டத்திலிருந்தும் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியிலிருந்து உடைந்து வந்து ஆசிய நிலப்பரப்பில் மோதியதால் இந்தியாவின் மேற்கு பீடபூமி பகுதியில் ஏற்பட்ட ஏற்றத்தால் இம் மலைத்தொடர் உருவாகியிருக்கும் என மியாமி பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளர்களான பேரன் மற்றும் ஹரிசன் கருதுகின்றனர். இதனால் மலைகளுக்குண்டான புவியல் விதிகளின் கீழ் இதனை மலை என அவர்கள் ஏற்பதில்லை. இம் மலைத்தொடர் தன்னகத்தே 39 பல்வேறுபட்ட கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 10, கேரளாவில் 20, தமிழகத்தில் 5 என கானுயிர் சரணாலயங்களும், தேசிய பூங்காக்களும் இம் மலைத்தொடர்ச்சி முழுதும் விரிந்துள்ளது. இம் மலைத்தொடர் தனக்கே உரிய சுமார் 5000க்கும் மேற்பட்ட அபூர்வ தாவரங்கள், 134 வகையான பலூட்டிகள், 508 வகையான பறவை இனங்கள், 325 வகையான அரிய உயிரினங்கள் வாழும் பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் ஜீவாதாரமாக விளங்கும் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, குந்தியா போன்ற நதிகளின் பிறப்பிடமாகவும் இது உள்ளது.

அறிஞர் மாதவ் காட்கில் தனது அறிக்கையில் குறிபிடுவது போன்று, அகஸ்திய மலையினைத் தலையாகவும், நீலகிரியினையும், ஆனைமலையினையும் மார்புகளாகவும், கனரா முதல் கோவா வரை நீண்ட உதடுகளையும் கொண்டும், வடக்கு சகயதிரியினை கால்களாகவும் கொண்ட பெண் இம் மலைத்தொடர். ஒரு காலத்தில் பளபளக்கும் பச்சை உடையுடன் செழுத்திருந்த அவள் உடைகள் சுயநல சக்திகளால் கிழித்தெறியப்பட்டு அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணாக இன்று காட்சி தருகின்றாள்.

கோவா மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டும் தொழிலில் சுமார் ரூபாய் 6,500 கோடி மதிப்புள்ள வளத்தினைத் திருடியுள்ளதாக அரசு கூறிய போது, இது குறித்து ஆய்வு செய்த ஷா கமிசன் இந்த திருட்டு ரூபாய் 35,000 கோடி என மதிப்பிட்டது. மகாராஷ்ட்ராவின் ரத்தனகிரி மாவட்டத்தில் லோட்-பரசுராம் தொழிற் பேட்டையின் ரசாயன தொழிற்சாலைக் கழிவினால் போஜ்ரா அணை நீர் செந்நிறமாகிப்போனது. கேத் நகரின் குடிநீர் ஆதாரமான அது, இன்று குடிக்க அருகதையற்றதாக மாறியுள்ளது. இதனால் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களின் வாழ்வாதரத்தை இழந்தார்கள். கேராளாவின் பாலக்காட்டில் பிளாச்சிமடாவில் கோக கோலா கம்பெனியால் உண்டான நிலத்தடி நீர் பாதிப்புக்கு எதிராக அங்கு மக்கள் போராடினர். அப் பகுதி பஞ்சாயத்து கோக கோலா ஆலையை மூட முடிவு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை எதிர்த்து கம்பெனி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பஞ்சாயத்துக்கு அந்த அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதிகார வர்க்கம் மற்றும் ஆட்சியாளர்களின் அக்கறையின்மை மற்றும் ஊழல் காரணமாக சட்டங்களுக்கும் விதிகளுக்கும் புறம்பாக மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏராளமான சுரங்கப் பணிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது. இது பெரும் இயற்கை சீர்கேட்டுக்கு வித்திட்ட நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவியல் அறிஞர் மாதவ் காட்கில் தலைமையில் 13 நபர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இது மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் அறிஞர்கள் குழு(Western Ghats Ecology Expert Panel) என அழைக்கப்பட்டது.

இக் குழுவின் முக்கிய நோக்கமானது மேற்குத்தொடர்ச்சி மலைச் சூழல் குறித்து முழு தகவல்களை ஒருங்கிணைப்பது, இம் மலையில் உள்ள சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய,அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் (Ecologically Sensitive Zone) பகுதிகளை வரையறுப்பது, ஆட்சியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சூழல்வாதிகள் மற்றும் கிராம சபையின் ஒத்துழைப்புடன் இம் மலையினை காக்க வழி வகுப்பது ஆகியவையாக இருந்தது. இக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு, 2011 ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையினை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் சமர்பித்தது. ஆனால் மத்திய அமைச்சரகம் அந்த அறிக்கையினை வெளியிடவில்லை. இதன் தொடர்ச்சியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா என்ற ஒருவரால் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒரு போராட்டத்திற்குப் பின் டெல்லி உயர்நீதிமன்ற உத்திரவினை அடுத்து இந்த அறிக்கையானது மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment