Friday 12 April 2024

சர்வம் சிவார்பணம்

இறை வழிபாடு பல வழிகளில் செய்யலாம். சிறுவயதிலேயே நம் பெரியவர்கள் வீட்டில் பூஜை அறையிலோ அல்லது நினைவிடங்களிலோ எளிய முறையில் வழிபடுவதைப் பார்க்கிறோம். இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை நம் பெரியோர்களைப் பின்பற்றி கற்றுக்கொள்கிறோம். நாம் கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம், அங்கு விரிவான வழிபாட்டு முறைகளைக் காண்கிறோம். கோவில்களில் செய்யப்படும் சடங்குகள் அழகாகவும், கலைநயமிக்கதாகவும், புனித நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படியும் இருக்கும். நம்மில் பலர் நம் வீடுகளிலும் விரிவான பூஜை செய்கிறோம். நாம் ஆன்மீக பாதையில் நடக்கும்போது, ​​வீடுகள், நினைவிடங்கள் மற்றும் கோயில்களில் வெளிப்புற பூஜையிலிருந்து உள் வழிபாட்டிற்கு செல்கிறோம். வழக்கமான தினசரி வெளிப்புற வழிபாட்டுடன் மானச(உள் மன) பூஜையும் இருக்க வேண்டும். 
அதில் நமது முன்னோர்கள் பெரும்பாலான மலைகளை தேர்வு செய்து வழிபாட்டிற்கு உகந்த இடங்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.
அப்படி பல நூறு சித்தர்கள் தவம் செய்த மலையாகவும் சித்தர்களில் முதன்மையான சித்தன் சிவபெருமானே தவம் செய்துகொண்டிருக்கிற மலையாகவும் விளங்குகிற தென் கைலாய மலை வெள்ளியங்கிரி. 
அங்கே ஏழு மலைகள் உள்ளதும் ஒவ்வொரு மலையிலும் பல சிறப்புகள் உள்ளதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதில் குறிப்பிட தக்க மலை ஐந்தாவது மலை. அப்படியென்ன சிறப்பு என்கிறீர்களா?
வெள்ளியங்கிரி சென்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஐந்தாவது மலையில் தொடங்கி ஆறாவது மலை வரை இருக்கும் தூரத்தில் பழமையான புராணங்களான மகாபாரதம், இராமாயணம் தொடர்பான பெயர்கள் கொண்ட இடங்களை கண்டிருப்பீர்கள்.  அர்சுனன் தலைப்பாறை,சீதை வனம்,பீமன் களியுருண்டை போன்ற இடங்களும் ஒரே நேரத்தில் 50-60 பேர் அமர்ந்து தியானம் செய்கிற அளவுள்ள சேத்திழைக் குகையும் அமைந்திருக்கிறது  உங்களுக்கு தெரியும்.
இதில் மலை முடிவில் பிரமாண்டமான பாறை பீமன் களியுருண்டை என அழைக்கப்படுகிறது. 
அங்கு பல புராணம் சார்ந்த நம்பிக்கைகள் இருக்கிறது நாம் அதை ஆராயாமல் ,வெள்ளியங்கிரி யில் பீமன் தவம் செய்தாரா? அல்ல அர்சுனன் தவம் செய்தாரா? என்பதை தாண்டி இந்த பீமன் களியுருண்டையின் கோட்பாட்டை உணர்வோம் வாருங்கள்!
இந்த கலியுகத்தில் எல்லோரும் நினைத்த நேரத்தில் இறைவனை கண்டிட முடிவதில்லை இன்னும் சொல்லப்போனால் இறை வழிபாட்டிற்கு கூட நாம் நம்மை முழுமையாய் அர்பணிப்பதில்லை. நேரம் ஒதுக்கி இறை வழிபாட்டிற்காக மலை கோவில்களுக்கோ வழிபாட்டு தலங்களுக்கோ செல்ல முடிவதில்லை. அதனால் நமது முன்னோர்கள் உருவக கோட்பாட்டை உருவாக்கி அதன் மூலம் நாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இறைவனை வணங்க ,துதிக்க உண்டாக்கப்பட்ட உருவகம் தான் இந்த பீமன் களியுருண்டை.
அர்ஜுனனுக்கு சிவ வழிபாடு என்பது அவ்வளவு பிடித்தமான விடயம் உண்ண மறந்தாலும் சிவபெருமானை நினைக்க மறவாத ஆகச்சிறந்த சிவ பக்தன் அர்ஜுனன். இது அனைவரும் அறிந்தது அப்படி இருக்க ஒரு நாள் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய பூஜைக்கு தாமதமாகி போனது அர்ஜுனன் மிக மனவேதனையோடு ஐயா நான் செய்ய வேண்டிய பூஜைக்கு தாமதமாகி போனதே என்று மன வருத்தத்தோடு அவர் வழக்கமாக வழிபாடு செய்யும் இடத்திற்குப் போகிறார். அங்கு போய் பார்க்கும்போது சிவபெருமானுடைய இடத்தைச் சுற்றி அதிகமான பூக்கள் குவிந்திருப்பதோடு பூக்கள் விழுந்து கொண்டே இருக்கிறது இதைப் பார்த்த அர்ஜுனன் ஆச்சரியப்பட்டு சிவபெருமானை நோக்கி வேண்டினார் ஐயா என்ன அதிசயம் இது? நான் இப்போது தானே இங்கு வருகிறேன் பூஜை செய்ய கூட இல்லையே ஆனால் இதற்கு முன்பு இங்கு யார் வந்து பூஜை செய்தார்கள்? என்று சிவபெருமானை நோக்கி வினவினார் அர்ஜுனன். அதற்கு சிவபெருமான் அவர் முன்தோன்றி அர்ஜுனா ஆகச்சிறந்த  பக்தன் உலகத்தில் ஒருவன் இருக்கிறான் அவன் வேறு யாருமல்ல உனக்கு நன்றாக அறிமுகமான பீமன் தான் அவன் எனக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறான் அந்த தோற்றத்தை தான் நீ இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று சிவபெருமான் அர்ஜுனனுக்கு பதில் உரைக்கிறார். இதைக் கேட்டு அர்ஜுனன் அதிர்ச்சி அடைந்து போகிறான்.
 என்னது பீமனா? 
பீமன் எங்கள் சகோதரன் தான் அவனைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் அவன் அதிகாலையில் தூங்கி எழும் நேரம் கூட மிகவும் தாமதமானது அவன் பூஜை செய்து இதுவரை நான் பார்த்ததே கிடையாது என்கிற கேள்விகள் எல்லாம் அவன் மனதில் எழத் தொடங்கி இருக்கிறது. உடனே அர்ஜுனன் ஐயனே பீமன் பூஜை செய்து யாரும் கண்டதில்லையே இது எப்படி சாத்தியம் என்கிறார்.
அதற்கு சிவ பெருமான் "வழக்கமாக எல்லோரும் செய்யும் பூஜையானது வாடிவிடும் பூக்களை கொண்டது ஆனால் யார் ஒருவர் மனத்தால் எம்மை நினைந்து பூஜிக்கிறார்களோ அவர்களின் எண்ணங்களக போல அவர்கள் வைத்து வழிபடும் பூக்கள் வாடுவதும் இல்லை,எனக்கு அத்தகைய பூஜை சலிப்பதும் இல்லை என்றுகூறி மறைகிறார்.
அர்ஜுனன் உடனே சகோதரன் பீமன்   இருக்கும் இடம் நோக்கி போகிறார். அங்கு பீமன் வழக்கமான வேலைகளில் இருக்கிறார் .அர்ஜுனர் "பீமனே அன்றாட வேலைகளுக்கு மத்தியில் எப்படி இறைவழிபாடு செய்கிறாய் என்று வினவுகிறார்"
பீமன் "அது அக வழிபாடு சகோதரனே அதை எங்கிருந்தும் எப்போதும் செய்யலாம் அதற்கு பணமோ,பொருளோ,இன்னபிற எதுவுமே தேவையில்லை மாறாக இறைவன்பால் தூய அன்பும் பக்தியும் மட்டுமே போதும். நான் கண்ணால் காண்கிற யாவையும் சிவனுக்கு அர்பணித்துவிட்டு கடந்துவிடுவேன் அது சிவனுக்கு சென்றுவிடும்" என்றார்.
அர்ஜுனன் அப்போது தான் பீமன் எப்போதும் உச்சரிக்கும் "சிவார்பணம்" எனும் செல்லின் ஆழத்தை உணந்து பீமனின் காலில் விழுந்து வணங்கினார். 
அப்போது சகோதரர்கள் எல்லோரும் சேர்ந்து பஞ்சாட்சர நாமமான "சிவாயநம" எனும் கோஷத்தை விண்ணதிர முழங்கினர். அவர்களைப் பார்த்து சிவ பெருமான் அகம் மகிழ்ந்தார்.
அந்த இடத்தின் உருவக தோற்றம் தான் பீமன் களியுருண்டை என நாம் அறியும் இந்த இறை உறைவிடம்.
இதை உணத்தவே இறைவன் எம் கனவில் தோன்றி மனிதன்னின் இதய அளவு கொண்ட மன லிங்கத்தை பீமன் களியுருண்டை க்கு கீழ் வைத்து வழிபட எமக்கு உத்தரவிட்டார் .அதன்படி இந்த ஆண்டு மன லிங்கத்தை நிறுவி திருமுறைகள் ஓதி வழிபட்டோம். இதிலிருந்து இறைவன் புற வழிபாட்டை விட அக வழிபாட்டிற்கே அதிக முக்கியத்துவம் தருகிறார் என்பது திண்ணமாகிறது. 
எனவே அன்பானவர்கள் அக பூஜை செய்து அண்டமாளும் சிவபெருமானின் அடி சேர வேண்டுகிறேன் அடியேன்.
!வாழ்க வையகம்! வாழ்க நலம்!
       திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment