ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

வெள்ளியங்கிரி மலை சுற்றுலா தளம் அல்ல 🏔️


சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக மக்கள் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வருகிறார்கள். 
பூண்டி கோவிலும் பல ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு வருபவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கும் சென்று வருவதும் வழக்கமான ஒன்று தான். வனத்துறை உருவாக்கப்பட்டதற்கு முன்பிருந்தே பக்தர்கள் மலைக்குச் சென்று வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் மட்டுமில்லாமல் மலையேற்றம் (ட்ரெக்கிங்) செல்ல விரும்புபவர்களும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

இத்தனை வருடங்களில் இந்த ஆண்டைப் போல அதிக வெப்பம் பதிவானதில்லை. மலை ஏறுபவர்கள் அதிக அயர்ச்சி அடைவதற்கு அதுவும் ஒரு காரணமாக உள்ளது.

1977-78 ல் வீசி பனிபுயலால் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் அதிக அளவிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டும் 5 பேரும் 2019 ஆம் ஆண்டு 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

👇 இவ்வளவு உயிர் இழப்புகள் நடக்கிறதே வனத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பல பேர் கண்மூடித்தனமாக வலைத்தளங்கள் மற்றும் youtube சேனலில் பேசுகிறார்கள் 👇

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மலைக்குச் செல்பவர்கள் நெகிழி மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வனத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மலை ஏறுபவர்களை பரிசோதித்த பிறகே மேலே அனுப்புகின்றனர்.

பூண்டி கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலை அடிவாரத்தில் அவசர ஊர்தி, மருத்துவ குழு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மலையேற்ற காலத்தில் வனத்துறை அலுவலர்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் ஒருங்கிணைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். மலை ஏறும் போது யாருக்கேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் 'டோலி' சுமப்பவர்கள் மூலம் அவர்கள் அடிவாரத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். கரடுமுரடான - கடினமான மலைப்பகுதி என்பதால் பக்தர்கள் பயணிக்கும் பாதை முழுவதும் பெரிய அளவிலான வசதிகளை ஏற்படுத்தி தர இயலாது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள்.

வனத்துறை அவர்களை பரிசோதித்து அனுப்பும் வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அது போக சுவாசப் பிரச்சனை, இருதயக் கோளாறு, மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்பவர்கள் மலையேற்றத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் ஒரு சிலரை அறிவுறுத்துவம் செய்கிறார்கள்.

ஆனால் முடிவு மலை ஏறுபவர்களுடையது தான். இந்த ஆண்டு உயிரிழந்தவர்களில் முதல் முறை வந்தவர்களும் உள்ளனர், பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தவர்களும் உள்ளனர். மக்கள் தான் தங்களின் உடல்நிலையை அறிந்து கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும்.

வனத்துறையால் மட்டுமே கட்டுப்பாடுகளை கொண்டு வர முடியாது. மருத்துவ ஆபத்து உள்ளவர்கள் இந்த பயணத்தை தவிர்க்க வேண்டும்.

வெள்ளியங்கிரி மலைக்கு வருகின்ற கூட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கு சாத்தியம் குறைவு. மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறை, அறநிலையத் துறை போன்ற பல துறைகள் இணைந்து எடுக்க வேண்டிய முடிவு அது.

பயணம் செய்ய நினைக்கும் பக்தர்கள் கவனத்திற்கு 👇

1. யாத்திரைய போதை பொருட்கள் உபயோகிப்பது கடும் குற்றம். 
2.தவறான சிந்தனை, செய்கை மற்றும் வார்த்தைகளை தவிர்ப்பது உத்தமம். 
3. கவனமில்லாத பயணம் ஆபத்தை விளைவிக்கக்கூடும். 
4.கால் நகங்களை வெட்டிவிட்டு செல்வது நலம். 
5. இறை சிந்தனை ஒன்றே பக்தர்களை காத்தருளும்.
6. காட்டில் வசிக்கும் சிறு உயிரினங்களுக்கும் துன்பம் விளைவித்தல் கூடாது.
7. மலை பயணத்தில் காலணி அணிவது உட்சிதம் அல்ல இருந்தாலும் தவறு ஏதும் கிடையாது.
8. எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம். 
9. நீண்ட நேரம் வெளிச்சம் தரக்கூடிய லைட் மிக மிக அவசியம். 
10. காட்டை எந்தவிதத்திலும் PLASTIC குப்பைகளால் அசுத்தம் செய்யாதீர். 
11. குறைந்த இடையுள்ள பொருட்களை எடுத்து செல்லவது நலம்.

இளைஞர்கள் பெரும்பாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பலர், பெரும்பாலும் தங்களின் உடல்நிலை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் நிச்சயம் இத்தகைய கடினமான பயணங்களை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொள்ளும்போது ரத்த அழுத்தம் அதிகமாகும். சர்க்கரை அளவு சீராக இல்லாதவர்கள் மலை ஏறும்போது அதிக அளவில் சர்க்கரை குறையும். அப்போது அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சிறிய அளவிலான மாரடைப்பு ஏற்படும். மலைப்பகுதியில் அவசர உதவி அல்லது உடனடி சிகிச்சை வழங்குவதற்கான வாய்ப்பும் இருக்காது.

5-வது மற்றும் 6-வது மலைகளில்தான் உடல்நலக்குறைபாடு ஏற்படும். அங்கு செல்போன் நெட்வொர்க் கிடைப்பது மிகவும் அரிது. ஏதாவது அவசரம் என்று தகவல் சொன்னால் மட்டுமே, கீழிருந்து டோலி உதவியுடன் வந்து அழைத்துச் செல்வார்கள். 

ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக வருபவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த மலையில் எப்படிச் செல்ல வேண்டும் என்று நன்கு தெரியும். பொறுமையாக, ஓய்வு எடுத்துச் செல்வது சிறந்தது.

புதிதாக மலை ஏறுபவர்கள் சிலர் வலைதளத்தில் வரும் வீடியோவை பார்த்துவிட்டு வெள்ளியங்கிரி மலையின் முழு அளவு தெரியாமல் ஏறுவதே அசம்பாவிதம் நடக்க காரணம்.

முதல் மலை 2250படிகள் கொண்டது அதாவது பழனி மலையை போல் மூன்று மடங்கு. இரண்டாவது மூன்றாவது மலையிம் அதே அளவுதான்.

நான்கு ஐந்தாவது மலை படிகள் இல்லாமல் இருக்கும் ஆறாவது இறக்கம்.

ஏழாவது மலை படிகள் ஏதும் இன்றி மண் மற்றும் பாறை மீது ஏற வேண்டும்.

இதன் உயரம் பழனி மலை போல் நான்கு பங்கு இருக்கும்.

மலை பயணம் என்றால் முதலில் விரதம் இருந்து நடைபயிற்சி செய்து தன் உடலை தயார் செய்திருக்க வேண்டும். குச்சி இல்லாமல் மலை ஏறவும் கூடாது இறக்கவும் கூடாது.

தேவையான பொருட்கள் சுமந்து செல்ல வேண்டும் தண்ணீர் உணவு மற்றும் டார்ச் லைட் மற்றும் குளிர் தாங்கும் உடைகள்
அவரவர் உடல் திறனுக்கு ஏற்ப மட்டுமே வேகமாக நடக்க வேண்டும் தன்னுடன் வந்தவர் முன்னே சென்று விட்டார் என்று ஓய்வு இன்றி தொடர்ந்து நடக்க கூடாது.

மலை ஏறுவதற்கு 5 முதல் 7 மணி நேரம் ஆகும் இறக்கவும் அதே அளவு நேரம் வேண்டும்.

அந்த மலையே சிவன் அதில் நாம் சிவன் மடியில் நடப்பதாக நினைத்து பக்தியுடன் ஏறினால் பயணம் இனிமையாக இருக்கும். முறையான யோக பயிற்சி செய்து வருவதும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

புனித பயணத்தின் போது ஈசனின் புனித தலமான இம்மலையில் சுற்றுப்புற சூழலும், துப்புரவும் காக்க வேண்டியது ஆன்மிக பற்றுக் கொண்ட ஒவ்வொருவரின் தலையாய கடமை. ஆனால் அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மிகச் சிலரே.
போதிய விழிப்புணர்வு இருந்தும் இப்படி ஈசன் குடிகொண்டுள்ள மலையை மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

புனித மலைக்கு வரும்போது புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். புண்ணிய தலங்களுக்கு பயணிக்கும் போது பொதுவாக இறைவன் மீது உள்ள பாடல்களைப் பாடுவர். (பன்னிரு திருமுறை, சித்தர் பாடல்கள்)போன்றவை.
சிலர் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பர்.

ஆனால் தற்பொழுது அந்த மாதிரி இல்லை சினிமா பாடல்களை ஒழித்துக் கொண்டு மலை ஏறிக் கொண்டிருக்கிறார்கள். (அந்த சினிமா பாடலைத்தானே எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்)

மலையேற்றம் நமது உடல் மற்றும் உள்ளதின் வலிமைக்கு ஒரு சுய பரிசோதனை. அதற்கு சிறிதேனும் பயிற்ச்சி தேவை. சிவ பக்தர்கள் என்றும் அதற்கு தயாராக இருப்பார்கள் அல்லது ஒரு மண்டலமாவது அதிகாலை நடை மற்றும் மூச்சு பயிற்ச்சி செய்து தங்களை தயார் செய்துகொள்வார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் மது, புகை போன்ற பழக்கங்களால் உடல் ஆரோக்கியத்தை தவறவிட்டுள்ளனர். மேலும் மலையேற்றம் பற்றிய புரிதல் இல்லாமையும் காரணமாக உள்ளது.

ஏழுமலை ஏறி வந்தாலும் ஒன்னுமே இல்லை என்ற நிலைதான் ஈசன்.

வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டும் என்றால் உடல் தகுதி இருந்தால் ஏறுங்கள் இல்லை என்றால் அடிவாரத்தில் வெள்ளியங்கிரி மலை சிவனை தரிசித்து விட்டு திரும்புங்கள்  நினைத்தாலே முக்தி தரக்கூடிய கடவுள் சிவன். பாதி வழியில் முடியவில்லை என்னால் முடியாது என்று நினைத்தீர்கள் என்றால் அந்த சிவபெருமானே உங்கள் இடத்தில் வந்து கூறியதாக நினைத்து திரும்பி வந்து விடுங்கள்.

எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய் சிந்தித்தே தெளிவாய்.
தனி மனித மாற்றமே சமுதாய மாற்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக